2016-03-28 15:30:00

மன்னார் வளைகுடாவில் பவளப்பாறைகள் அழியும் அபாயம்


மார்ச்,28,2016. மன்னார் வளைகுடாவில், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதால் பவளப்பாறைகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும், பவளப் பாறையைப் பாதுகாக்கவும், அவற்றை அழிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், வனத்துறை சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் மன்னார் வளைகுடாத் தீவு பாதுகாப்பு ஆர்வலர் என்.ஜெயகாந்தன் அவர்கள் கூறியுள்ளார்.

இராமேஸ்வரம் அருகே, பாம்பன் முதல் துாத்துக்குடி வரை, 21 தீவுகளைக் கொண்டுள்ள, மன்னார் வளைகுடாக் கடலில் அமைந்துள்ள பவளப்பாறைகளில், உணவுக்கும் மருந்துக்கும் பயன்படும், 250 வகையான, அரிய கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன.

பவளப்பாறைகள், கடல் அரிப்பை தடுத்து, அரிய மீன்களின் புகலிடமாகத் திகழ்வதால், அப்பகுதியில் மீன்பிடிக்க, வனத்துறை தடை விதித்துள்ளது. ஆனால், பாம்பன், மண்டபம், துாத்துக்குடி பகுதி மீனவர்கள், தடை செய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்குமடி உள்ளிட்ட வலைகளைப் பயன்படுத்தி, மீன் பிடிக்கின்றனர்.

இதனால், பவளப்பாறைகள் சேதமடைந்து கரை ஒதுங்குகின்றன. பவளப்பாறைகள் அழிவதுடன், அதை நம்பி வாழும் கடல் வாழ் உயிரினங்களும், அழியும் சூழல் உருவாகியுள்ளது என்று என்.ஜெயகாந்தன் அவர்கள் மேலும் கூறியுள்ளார். 

ஆதாரம் : தினமலர்/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.