2016-03-28 15:21:00

திருத்தந்தையின் வார்த்தைக்கு செவிமடுக்க ஜப்பானுக்கு அழைப்பு


மார்ச்,28,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, ஜப்பானுக்கு திருத்தூதுப்பயணம் மேற்கொள்ள வேண்டுமென்று அழைப்பு விடுத்தால், அவர் சொல்வதற்குச் செவிசாய்க்க வேண்டும் என்று, ஜப்பான் தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜப்பானில் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, புனித வெள்ளியன்று, அந்நாட்டு நீதி அமைச்சர் உறுதி செய்ததையடுத்து, ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பேசிய, ஆசிய காரித்தாஸ் அமைப்பின் தலைவரும், ஜப்பானின் Niigata ஆயருமான Tarcisio Isao Kikuchi அவர்கள் இவ்வாறு கூறினார்.

புனித வாரத்தின் மூன்று முக்கிய நாள்களில், அதிலும் குறிப்பாக, புனித வெள்ளியன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது மிகவும் கவலை தருகிறது என்றும், அரசின் போக்கு வியப்பாக உள்ளது என்றும் கூறினார் ஆயர் Kikuchi. 

ஜப்பானில், பெருமளவான மக்கள் மரண தண்டனைக்கு ஆதரவாக உள்ளனர் என்று கூறிய ஆயர் Kikuchi அவர்கள், இத்தண்டனை இரத்து செய்யப்பட வேண்டுமென திருத்தந்தை விடுத்துவரும் அழைப்பையும் நினைவுபடுத்தினார்.

56 வயது நிரம்பிய செவிலி Junko Oshida என்பவருக்கும், 75 வயது நிரம்பிய Yasutoshi Kamata என்பவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 1950ம் ஆண்டுக்குப் பின்னர் ஜப்பானில் தூக்குமேடை ஏறியிருக்கும் ஐந்தாவது பெண் Oshida ஆவார். மேலும், 75 வயதான Kamata, 1985ம் ஆண்டுக்கும், 1994ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 9 வயது சிறுமி உட்பட ஐந்து பேரைக் கொலை செய்தவர். 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.