2016-03-24 15:04:00

இது இரக்கத்தின் காலம்: எப்பொழுதும் நல்லவர் இறைவன்


ஒருசமயம், ஆசிரமக் குரு ஒருவர், தன் சீடர்களுடன் பயணம் செய்தார். பயணம் சென்ற வழியில் எந்த ஊரும் தென்படவில்லை. மரம், செடி, கொடிகளும் பார்வையில் படவில்லை. தாகத்துக்கு நீர் நிலைகள்கூட எங்கும் இருந்ததாகத் தெரியவில்லை. அதனால் சீடர்கள் அனைவரும் சோர்ந்து போயினர். இருட்டியதும் ஓரிடத்தில் எல்லாரும் தங்கினார்கள். களைப்புடனிருந்த சீடர்கள் உடனே படுத்துவிட்டனர். ஆனால் குரு அப்படிச் செய்யவில்லை. இறைவா, இன்று நீர் அருளிய எல்லாவற்றுக்கும் எனது உளமார்ந்த நன்றி என்று மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்தார். அச்செபத்தைக் கேட்டு வியப்புடன் எழுந்த சீடர் ஒருவர், குருவே, இறைவன் இன்று நமக்கு ஒன்றுமே தரவில்லையே என்று வினவினார். அதற்கு குரு, யார் சொன்னது? என்றார் புன்னகையுடன். பின்னர் சொன்னார் : இன்று இறைவன் நமக்குப் பசியை அளித்தார், அற்புதமான தாகத்தை அளித்தார். அதற்காகத்தான் நான் நன்றி செலுத்துகிறேன் என்று.

ஆம். உணர்ந்தோர் உரையார், உரைப்போர் உணரார் என்று சொல்வார்கள். எவ்வேளையிலும், என்ன நேர்ந்தாலும் இறைவனுக்கு நன்றிகூறச் சொல்கிறார் பவுலடிகளார். இறைவன் நல்லவர், கருணையுள்ளவர். இன்பம் எதனால் வருகிறதோ அதனாலேயே துன்பமும் வருகிறது. எதில் இன்பம் இல்லையோ அதில் துன்பம் என்பதும் இல்லை. ஞானிகள் எதையும் வெறுப்பதில்லை. அவர்கள் அனைத்தையும் சமமாகப் பார்க்கின்றனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.