2016-03-23 14:58:00

புதன் மறைக்கல்வி உரை: புனித வாரம் கற்றுத் தரும் இறை இரக்கம்


மார்ச்,23,2016. புனித வாரத்தில், அதுவும் இயேசுவின் பாடுகளில் பங்கு பெற, கிறிஸ்தவர்கள் அனைவரும் தங்களைத் தயாரித்து வரும் வேளையில், இப்புதனன்று இயேசுவின் பாடுகள் இந்த இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் நமக்குத் தரும் பாடம் குறித்து இவ்வார புதன் மறைக்கல்வி உரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த ஜூபிலி ஆண்டில் உயிர்ப்புப் பெருவிழாவுக்கு முன்னான புனித வியாழன், புனித வெள்ளி, புனித சனி ஆகிய மூன்று நாட்களின் திருவழிபாடுகளுக்கென தயாரித்துக் கொண்டிருக்கும் நாம், இயேசுவின் பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பில் வெளிப்படும் முடிவற்ற இறை இரக்கம் குறித்து இந்த யூபிலி ஆண்டுடில் சிறப்பான விதத்தில் தியானிக்க அழைப்புப் பெற்றுள்ளோம். புனித வியாழனன்று, தம்மையே நமக்கு உணவாக வழங்குவதிலும், சீடர்களின் பாதங்களை கழுவுவதிலும் நமக்கு ஒரு நல்ல பாடத்தைக் கற்றுத் தருகிறார் இறைவன். நாம் பிறருக்குச் சேவை புரிய வேண்டும் என்பதை நமக்குச் சொல்லித் தருகிறார் இயேசு.

புனித வெள்ளியன்று, இயேசுவின் சிலுவை மரணத்தின் மறையுண்மையில், அவரின், என்றும் அழியாத தெய்வீக அன்பு குறித்துத் தியானிக்கின்றோம். மனித குலமனைத்தையும் அரவணைத்துக் கொள்ளும் இறைவனின் இந்த அன்பு, அதற்குக் கைம்மாறாக, நாமும் இறை வல்லமையில் ஒருவரையொருவர் அன்புகூர வேண்டும் என அழைப்பு விடுக்கிறது. இறை அமைதியின் நாளான புனித சனிக்கிழமையன்று, நமக்கு இருவித அழைப்பு விடப்படுகின்றது. அதாவது, கைவிடப்பட்டோர் மற்றும் தனிமையில் வாடுவோருடன் நாம் ஒருமைப்பாட்டை அறிவிப்பதோடு மட்டுமன்றி, மரணத்தை வாழ்வாக மாற்றும் பற்றுமாறா அந்த அன்பில் முழு நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதே அந்த அழைப்பு. இவ்வாறு, இந்த நாட்கள், இறைவனின் அன்பையும், இரக்கத்தையும், சக்திவாய்ந்த முறையில் நமக்கு எடுத்துரைக்கின்றன.

நார்விச்சின் ஜூலியன் என்ற பெண்மணி, தனக்குக் கிடைத்த காட்சி ஒன்றில், இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டதாகக் கூறுகின்றார். அதாவது, நம்மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாக, நமக்காக இயேசு தன் உயிரை கையளித்தது குறித்து இயேசு, முடிவற்ற மகிழ்வைக் கொண்டுள்ளதாக அவரே கூறுவதை நார்விச்சின் ஜூலியன்  கேட்டிருக்கிறார். ஆகவே, வரவிருக்கும் இந்த நாட்களில் நாம்,  நம் மீட்பிற்காக சிலுவையின் வழியாக வழங்கப்பட்ட இறைவனின் இரக்கம் என்ற மறையுண்மை குறித்து நன்றியுடன் கொண்டாடுவோம்.

இவ்வாறு, புனித வாரத்தில் வழங்கிய புதன் மறைக்கல்வி உரையில், இயேசுவின் பாடுகள் மற்றும் மரணத்தின் வழியே வெளிப்படும் இறை இரக்கம் மற்றும் இறையன்பு குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.