2016-03-23 15:40:00

திருத்தந்தையின் Instagram செயலியைப் பார்ப்பவர் 15 இலட்சம்


மார்ச்,23,2016. “தங்களின் உயிரை இழந்த அனைவரையும் இறைவனின் இரக்கத்தில் ஒப்படைக்கின்றேன்” என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டது.

ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் ஒன்பது மொழிகளில் டுவிட்டரில் சிந்தனைகளை வெளியிட்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரசல்ஸ் நகரில் பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை இச்செவ்வாய் டுவிட்டரில் நினைவுகூர்ந்துள்ளார்.

மேலும், படங்களைப் பகிர்ந்துகொள்ள உதவும் Instagram என்ற வலைத்தள செயலியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 19, கடந்த சனிக்கிழமையன்று செயலாற்றத் துவங்கியதற்குப் பின்னர், 15 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் அதனைப் பார்த்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வத்திக்கான் ஊடகத் துறையால் நடத்தப்படும், 'Franciscus' என்ற திருத்தந்தையின் Instagram செயலியில், “இறைவனின் இரக்கம் மற்றும் கனிவு வழியில் உங்களோடு இணைந்து நான் நடக்க விழைகிறேன்” என்ற வார்த்தைகளோடும், திருத்தந்தை செபிக்கும் வண்ணம் அமைந்திருந்த படத்துடனும் அவரது முதல் வெளியீடு இருந்தது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் பக்கத்தை ஏற்கனவே 2 கோடியே 70 இலட்சத்துக்கு மேற்பட்டோர் பின்பற்றிவரும்வேளை, Instagram வலைத்தள செயலி தொடங்கிய சில நாள்களிலேயே 15 இலட்சத்துக்கு மேற்பட்டோர் அதனைப் பின்பற்றி வருகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.