2016-03-22 15:02:00

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 14


மார்ச் 20, இஞ்ஞாயிறன்று, வசந்த காலம் துவங்கிவிட்டதென அறிவிக்கப்பட்டுள்ளது. பருவக்காலங்கள், ஒரு குறிப்பிட்ட நாளில் வந்து சேர்வதில்லை என்று நாம் அறிவோம். இருப்பினும், நமக்கு நாமே வகுத்துக்கொண்ட காலச் சுழற்சியை வைத்து, இந்த நாளை வசந்தத்தின் முதல் நாள் என்று அழைக்கிறோம். பூமி நடுக்கோட்டிற்கு (பூமத்திய ரேகை) வடக்கே உள்ள பாதிக்கோளத்தில், மார்ச் 20ம் தேதி, இரவும், பகலும் சம அளவில் இருக்கும் என்ற கணிப்பின் அடிப்படையில், இந்நாளை, 'equinox' அதாவது, 'சமஇரவு' நாள் என்று குறிப்பிடுகிறோம். இந்த 'சமஇரவு' நாள் முதல், பகல் பொழுதின் அளவு அதிகரித்தும், இரவுப் பொழுதின் அளவு குறைந்தும் வரும். கூடுதலானப் பகல் பொழுதைத் துவக்கிவைக்கும் இந்நாளை, வசந்தத்தின் முதல்நாள் என்று கூறுகிறோம்.

வசந்தகாலத்தில் தாவர உலகம் அடையும் மாற்றங்கள், அழகானவை, அற்புதமானவை. குளிர்காலத்தில் தங்கள் இலைகளையும், மலர்களையும் இழந்த செடிகளும், மரங்களும், மீண்டும் புத்தாடை அணிந்து, வண்ணமயமாக மாறுகின்றன. வண்ணங்கள் நிறைந்த வசந்தத்தின் வருகையை அறிவிக்கும் ஓர் அழகியத் திருநாள், இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. ஒருவருக்கொருவர் வண்ணங்களைப் பூசி, வீதியெங்கும் வண்ணங்களைத் தெளிக்கும் 'ஹோலி' பண்டிகை, இவ்வாண்டு, மார்ச் 22,23,24 ஆகிய தேதிகளில்  கொண்டாடப்படுகிறது. தாவரங்களைப்போல, மனிதரின் வாழ்வும், வளமும், வண்ணமும், நிறைந்ததாய் மாறவேண்டும் என்ற செபம் நம் உள்ளங்களை நிறைக்கட்டும்.

வசந்த காலத்தின் முதல் நாளான இஞ்ஞாயிறன்று கொண்டாடப்பட்ட குருத்தோலை ஞாயிறு, புனித வாரத்தைத் துவக்கி வைத்தது. அன்று, வத்திக்கான், புனித பேதுரு வளாகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தியத் திருப்பலியில், போலந்து நாட்டு இளையோர், ஓர் அழகிய முயற்சியை மேற்கொண்டனர். போலந்து நாட்டில் இவ்வாண்டு ஜூலை மாதம் கொண்டாடப்படவிருக்கும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் மையக் கருத்தாக, "இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்" என்ற நற்செய்தி வாக்கியம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இரக்கத்தை வலியுறுத்தும் ஓர் அடையாளச் செயலாக, போலந்து இளையோர், ஒலிவக்கிளைகளை வத்திக்கான் வளாகத்திற்குக் கொணர்ந்திருந்தனர். இந்த கிளைகள் சேகரிக்கப்பட்ட இடங்கள், பொருளும், புனிதமும் நிறைந்த இடங்கள். இயேசு, புனித பூமியில் தன் பாடுகளைத் துவக்கிய ஒலிவமலை, அமைதியின் தூதரென உலகெங்கும் கொண்டாடப்படும் புனித பிரான்சிஸ் பிறந்த ஊரான அசிசி, ஆகிய இடங்களிலிருந்து, போலந்து இளையோர் சேகரித்துக் கொணர்ந்த ஒலிவக்கிளைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அர்ச்சித்து, அவற்றை மீண்டும் இளையோரிடம் கொடுத்தார்.

ஒலிவக்கிளை, சமாதானம், ஒப்புரவு, மன்னிப்பு என்ற பல கருத்துக்களுக்கு அடையாளமாக விளங்குகின்றது. உலகில் இன்று, சமாதானம், ஒப்புரவு, மன்னிப்பு ஆகியவை அதிக அளவில் தேவை என்பதன் அடையாளமாக, இந்த ஒலிவக் கிளைகளை, போலந்து இளையோர், தங்கள் நாட்டுக்கு எடுத்துச் சென்று, இளையோர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துவரும் அரசு அதிகாரிகள், மற்றும் தலத்திருஅவை அதிகாரிகள் அனைவருக்கும், இறை இரக்கத்தின் ஞாயிறன்று வழங்கவிருக்கின்றனர். பொருள்நிறைந்த இந்த முயற்சி, முற்றிலும் இளையோரிடமிருந்து உருவான ஒரு முயற்சி என்பதை அறியும்போது, மனம் குளிர்கிறது.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் நாம் கொண்டாடும் உயிர்ப்புப் பெருவிழாவும், வசந்த விழாவும், இரக்கத்திலும், நம்பிக்கையிலும் இவ்வுலகை நிறைக்கவேண்டுமென்று மன்றாடுவோம். குறிப்பாக, இவ்வுலகின் வசந்தமாக வலம்வரும் இளையோர், இரக்கம், மன்னிப்பு, ஒப்புரவு ஆகிய பண்புகளில் வளரவேண்டும் என்றும் வேண்டுவோம்.

வசந்தகாலம் வந்துவிட்டதென்பதை, உரோம் நகருக்கு வருகை தரும் பயணிகளின் கூட்டம் சுட்டிக்காட்டுகிறது. அதிலும் சிறப்பாக, இது இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டாக இருப்பதால், உரோம் நகரின் பசிலிக்கா பேராலயங்களையும், அவற்றில் உள்ள புனிதக் கதவுகளையும் நாடி வரும் திருப்பயணிகளின் எண்ணிக்கை கூடிவருவதை உணரமுடிகிறது. உலகெங்கும் புனிதக் கதவுகள் திறக்கப்பட்டிருந்தாலும், உரோம் நகரில் அமைந்துள்ள புனிதக் கதவுகள் தங்கள் ஈர்ப்புச் சக்தியை இழந்துவிடவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

புனிதக் கதவு வழி செல்வோர் பெறக்கூடிய பரிபூரணப் பலனைக் குறித்து, சென்ற விவிலியத் தேடலில் நம் சிந்தனைகளைத் துவக்கினோம். இதுவரை நிகழ்ந்துள்ள யூபிலி ஆண்டுகளில், பரிபூரணப் பலனைப் பெறுவதற்கு, 5 வழிகள் கூறப்பட்டுள்ளன. புனிதக் கதவு வழியே நுழைவது, ஒப்புரவு அருளடையாளம் பெறுவது, திருப்பலியில் பங்கேற்பது, விசுவாசப் பிரமாணம் சொல்வது, திருத்தந்தையின் கருத்துக்களுக்காகச் செபிப்பது என்ற 5 கடமைகளை நிறைவேற்றுவோர், பரிபூரணப் பலனைப் பெறுவர் என்பது, இதுவரை நிலவிவந்த மரபு.

உரோம் நகரின் பசிலிக்காப் பேராலயங்களில் மட்டும் அல்ல, உலகெங்கும் உள்ள பல ஆலயங்களிலும், பிறரன்பு இல்லங்களிலும் புனிதக் கதவுகள் திறக்கப்படும் என்று கூறியதன் வழியே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதக் கதவுகள் குறித்து ஒரு மாற்றுக் கண்ணோட்டத்தைத் தந்துள்ளார் என்று சிந்தித்தோம். அதேபோல், பரிபூரணப் பலனைப் பெறுவதற்கு இதுவரை நிலவிவந்த வழிமுறைகளிலும், திருத்தந்தை, மாற்றங்களைக் கொணர்ந்துள்ளார்.

இரக்கத்தின் யூபிலி ஆண்டில், பரிபூரணப் பலனைப் பெறுவது எவ்விதம் என்பதை விளக்கி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பேராயர் சால்வாத்தோரே ­ஃபிசிக்கெல்லா (Salvatore Fisichella) அவர்களுக்கு அனுப்பிய ஒரு மடலில், திருஅவையின் யூபிலி வரலாற்றில் இதுவரை நிலவிவந்த 5 கடமைகளையும் மீண்டும் ஒரு முறை குறிப்பிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, இம்மடலில் திருத்தந்தை அவர்கள் கூறியுள்ள சில கருத்துக்கள், அவரது மென்மையான குணத்தை வெளிப்படுத்தும் சொற்களாகவும், இதுவரை சொல்லப்படாத எண்ணங்களாகவும், விளங்குகின்றன: "பல்வேறு காரணங்களால், புனிதக் கதவு வழியே நுழைய முடியாதவர்களைப்பற்றி நான் எண்ணிப் பார்க்கிறேன். குறிப்பாக, நோயாலும், முதிர்ந்த வயதாலும், தனிமையாலும் தங்கள் இல்லங்களுக்குள்ளேயே அடைபட்டிருப்போரை எண்ணிப் பார்க்கிறேன்" என்று இப்பகுதியின் ஆரம்பத்தில் திருத்தந்தை கூறியுள்ளார்.

தங்கள் நோயாலும், துன்பங்களாலும் கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகிய மறையுண்மைகளில் இணையும் இவர்கள், தாங்கள் இருக்கும் இடத்திலேயே பரிபூரணப் பலனை அடைவர் என்று திருத்தந்தை இம்மடலில் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் வாழும் இடங்களில் நிகழும் திருப்பலிகளில் கலந்துகொள்வது, அல்லது, திருநற்கருணையை மட்டும் பெறுவது, அல்லது, இவ்வில்லங்களில் நிகழும் செப வழிபாடுகள் பங்கேற்பது, அல்லது, இன்றைய தொடர்பு சாதனங்களின் உதவியோடு இந்த ஆன்மீக நிகழ்வுகளைக் காண்பது என பல்வேறு வழிகளைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, அவற்றில் ஏதாவது ஒரு வழியில், அவர்கள் பரிபூரணப் பலனைப் பெறுவர் என்று இம்மடல் வழியே தெளிவுபடுத்தியுள்ளார். வயது முதிர்ந்தோரையும், நோயுற்றோரையும், இறைவன், தானே தேடிச்சென்று, பரிபூரணப் பலனை அளிப்பார் என்பதை, திருத்தந்தையின் சொற்கள் சொல்லாமல் சொல்கின்றன. இச்சொற்களை வாசிக்கும்போது, வயது முதிர்ந்தோரையும், நோயுற்றோரையும், இயேசு தேடிச் சென்ற பல நிகழ்வுகள் நம் நினைவுகளில் அலைமோதுகின்றன.

இயேசு பிறந்த இடத்தை, புனிதக் கதவு உள்ள ஓர் ஆலயம் என்று நாம் ஒப்புமைப்படுத்தினால், அந்தப் புனிதக் கதவை நாடி, இடையரும், கீழ்த்திசை அறிஞரும் சென்று, இயேசுவைக் கண்டனர், பரிபூரணப் பலனைப் பெற்றனர் என்று கற்பனை செய்து  பார்க்கலாம். இவை, திருஅவையின் யூபிலி வரலாற்றில் இதுவரை நிகழ்ந்துவந்த பாரம்பரியத்தைக் குறிக்கும் நிகழ்வுகள்.

ஆனால், இரு முதியவர்களைத் தேடி, குழந்தை இயேசு அவர்கள் இருந்த இடத்திற்கே சென்றார் என்பதை, நாம் லூக்கா நற்செய்தியில் வாசிக்கிறோம். குழந்தை இயேசுவை, அவரது பெற்றோர், எருசலேம் கோவிலுக்கு தூக்கிச் சென்ற நிகழ்வில், (லூக்கா 2: 22-38) வயது முதிர்ந்த சிமியோன், அன்னா, இருவரையும் சந்திக்க, அவர்கள் இருந்த இடத்திற்கே இயேசு சென்றார் என்பதைக் காண்கிறோம்.

மீட்பரைக் காணவேண்டும் என்ற ஆவலுடன் வாழ்ந்துவந்த முதியவர் சிமியோன் (லூக்கா 2: 29-30), இயேசு  பிறந்த இடத்தை, அதாவது, புனிதக் கதவைத் தேடிச் செல்லமுடியாத நிலையில் இருந்தார். அதேபோல், இளவயதிலேயே கைம்பெண்ணாகி, அதன்பின், பல ஆண்டுகள், எருசலேம் கோவிலையே தன் வாழ்வாக மாற்றிவிட்ட 84 வயது நிறைந்த அன்னா (லூக்கா 2:36-38) அவர்களும், இயேசுவைத் தேடிச்செல்ல வாய்ப்பின்றி வாழ்ந்துவந்தார். இவ்விரு முதியோரையும், குழந்தை இயேசு தேடிச் சென்றார், பரிபூரணப் பலனை அளித்தார்.

அதேவண்ணம், நோயுற்ற பலர் இயேசுவைத் தேடிச் சென்று நலமடைந்ததை நற்செய்தியில் காணும் நாம், நோயுற்ற பலரை இயேசு தேடிச் சென்றார் என்பதையும் காண்கிறோம். காய்ச்சலால் முடங்கிக் கிடந்த பேதுருவின் மாமியார் (மாற்கு 1: 29-31), குணமளிக்கும் பெத்சதா குளத்தருகே, 38 ஆண்டுகளாக நோயுற்றுக் கிடந்தவர் (யோவான் 5: 1-8), நயீன் கைம்பெண்ணின் இறந்த மகன் (லூக்கா 7: 11-15) ஆகியோரை, இயேசு தேடிச் சென்று நலம் வழங்கினார்.

தங்கள் முதுமையாலும், நோயாலும் புனிதக் கதவையும், ஆலயத்தையும் நாடிச் செல்ல முடியாத முதியோர், நோயுற்றோர் ஆகியோரைத் தேடி, இறைவனின் இரக்கம் அவர்கள் வாழும் இடங்களுக்கே இந்த யூபிலி ஆண்டில் செல்கிறது என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மடலில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளது, இந்த இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டினை மேலும் அர்த்தமுள்ளதாக்குகிறது.

நோயுற்றோர், முதியோர், தனிமையில் இருப்போர், தாங்கள் இருக்கும் இடத்திலேயே எவ்விதம் பரிபூரணப் பலனைப் பெறமுடியும் என்பதைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, அடுத்ததாக, இம்மடலில், சிறையிலிருப்போரை எண்ணிப் பார்க்கிறார். தங்கள் சுதந்திரத்தை இழந்து தவிக்கும் இவர்கள், பரிபூரணப் பலனைப் பெறுவது குறித்து திருத்தந்தை கூறியுள்ள எண்ணங்களை நம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.