2016-03-22 16:10:00

துன்புறும் அனைவருக்காவும் புனித வெள்ளி சிலுவைப்பாதை


மார்ச்,22,2016. உரோம் நகரில், கொலோசேயும் எனும் இடத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்றும் நடத்தும் புனித வெள்ளி சிலுவைப்பாதை பக்தி முயற்சி தியானச் சிந்தனைகள், குடிபெயர்ந்தவர், பயன்படுத்தப்பட்ட சிறார், முறிந்த குடும்பங்கள் போன்ற தலைப்புகளில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சிலுவைப் பாதைக்குத் தியானச் சிந்தனைகளை வழங்குவதற்கு, ஒவ்வோர் ஆண்டும் யாராவது ஒருவரைக் கேட்கும் திருத்தந்தை, வருகிற புனித வெள்ளியன்று இடம்பெறும் சிலுவைப்பாதை பக்தி முயற்சிக்கு, இத்தாலியின் பெரூஜியா பேராயர் கர்தினால் குவால்த்தியெரோ பஸ்ஸெத்தி (Gualtiero Bassetti) அவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தான் எழுதியுள்ள தியானச் சிந்தனைகள் பற்றிக் கூறியுள்ள கர்தினால் பஸ்ஸெத்தி அவர்கள், இக்காலத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை மையமாக வைத்து, சிலுவைப் பாதையின் ஒவ்வொரு நிலைக்கும் சிந்தனைகளை எழுதியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துவின் திருப்பாடுகள் பற்றித் தியானிக்கும்போது, மனிதரின் பாவமும், துன்பங்களும் இக்காலத்தில் தொடர்ந்து இடம்பெறுவது குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும் என்றும் விண்ணப்பித்துள்ளார் கர்தினால் பஸ்ஸெத்தி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.