2016-03-22 16:23:00

ஒற்றுமை, மாண்பு, வேலை சமுதாயத்தின் வளமைக்குத் தூண்கள்


மார்ச்,22,2016. ஒற்றுமை, மனித மாண்பு, வேலை ஆகிய மூன்று விழுமியங்களும் எந்த ஒரு சமுதாயத்தின் வளமைக்கும் தூண்களாக உள்ளன என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஆப்ரிக்காவின் பெரிய ஏரிகள் பகுதியில் இடம்பெறும் சண்டைகளைத் தடுப்பது மற்றும் அவற்றுக்குத் தீர்வு காண்பது குறித்து, இத்திங்களன்று ஐ.நா. பாதுகாப்பு அவையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பேசிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பெர்னதித்தோ அவுசா அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

ஆப்ரிக்காவின் பெரிய ஏரிகள் பகுதியில் இடம்பெறும் ஆயுதம் ஏந்திய சண்டைகளின் சிக்கல் நிறைந்த பிரச்சனைகளுக்கும், அப்பகுதியின் வளர்ச்சியின்மைக்கும் தீர்வு காண்பதற்கு இந்த மூன்று விழுமியங்களும் மிகப்பெரும் உதவியாக அமையும் என்றும் எடுத்துரைத்தார் பேராயர் அவுசா.

ஆப்ரிக்காவின் இப்பகுதிக்கு கடந்த நவம்பரில் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டபோது, மத்திய ஆப்ரிக்கக் குடியரசு, ஒற்றுமை, மனித மாண்பு, வேலை ஆகிய மூன்று விழுமியங்களைத் தனது விருதுவாக்காகக் கொண்டிருப்பது கண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தூண்டுதல் பெற்றார் என்பதையும் ஐ.நா.வில் குறிப்பிட்டார் பேராயர் அவுசா.

ஒற்றுமையின்றி பிரிவினைகளும், அனைவரின் மாண்பை மதிக்காமல் கடும் மனித உரிமை மீறல்களும், எல்லாருக்கும் மாண்புடன்கூடிய வேலை இல்லாமல் கடும் ஏழ்மையும் நிலவினால் ஆப்ரிக்காவின் இப்பகுதியில் காணப்படும் பல பிரச்சனைகளுக்கு எந்தத் தீர்வும் காண்பது கடினம் என்பதையும் கோடிட்டுக் காட்டினார் பேராயர் அவுசா.

இப்பகுதியின் ஏராளமான இயற்கை வளங்கள், சலுகை பெற்ற சிலரால் சுரண்டப்படுவதைத் தடைசெய்து, அவை அனைவரின் பொது நன்மைக்குப் பயன்படுத்தப்பட அனைத்துலக சமுதாயம் ஆதரவு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார் பேராயர் அவுசா.

இப்பகுதியில் ஆயுதங்களும், ஆயுதம் ஏந்திய குழுக்களும் பரவி வருவதைக் குறிப்பிட்ட  பேராயர் பெர்னதித்தோ அவுசா அவர்கள், இக்குழுக்கள் ஆயதங்களைக் கைவிட்டு, தங்கள் நாடுகளின் வளர்ச்சியில் ஒத்துழைப்பதற்கு அர்ப்பணிக்குமாறும் வலியுறுத்தினார். 

ஆப்ரிக்காவில் ஆயுதம் வர்த்தகம் கட்டுப்படுத்தப்பட உலக சமுதாயம் உழைக்குமாறும் கேட்டுக்கொண்டார் பேராயர் அவுசா. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.