2016-03-22 14:53:00

இது இரக்கத்தின் காலம் : உயிர்பிரியும் வேளையில் உறுப்பு தானம்


சென்ற மாதம் 17ம் தேதி, ஊடகங்கள் வழியே பகிர்ந்துகொள்ளப்பட்ட ஓர் உண்மை நிகழ்வு இது. உள்ளத்தை உயர்த்தும் இந்த உன்னத நிகழ்வு, கர்நாடகா மாநிலத்தில் நிகழ்ந்தது.

24 வயது நிறைந்த ஹரிஷ் நஞ்சப்பா என்ற இளையவர், வெளியூரில் இருந்த தன் தாயையும், குடும்பத்தினரையும் சந்தித்துவிட்டு, பெங்களூருக்கு தன் இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். சாலையில் வெகு வேகமாக வந்த ஒரு லாரி அவர் மீது மோதியதால், சாலையில் எறியப்பட்டார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஹரிஷ் அவர்கள், 20 நிமிடங்களுக்கும் மேலாக உதவி கேட்டு குரல் எழுப்பியும் உதவி கிட்டவில்லை. அவர் அடிபட்டுக் கிடப்பதை, ஒரு சிலர் தங்கள் கைப்பேசிக் 'காமரா'க்களில் பதிவு செய்தனர் என்று ஒரு செய்தித்தாள் (Bangalore Mirror) கூறியது. ஹரிஷ் அவர்கள், உதவி கேட்டு குரல் எழுப்பிய அதே வேளையில், தன் உறுப்புக்களைத் தானம் செய்துவிடும்படியும் குரல் எழுப்பி வந்ததாக, மற்றொரு செய்தித்தாள் (The HIndu) கூறியுள்ளது.

இறுதியாக, அங்குவந்து சேர்ந்த ஓர் 'ஆம்புலன்ஸ்', அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற வழியில், அவர் உயிர் பிரிந்தது. 'ஆம்புலன்ஸ்' ஓட்டுனரிடம் ஹரிஷ் அவர்கள், மீண்டும் தன் உறுப்பு தானம் பற்றிக் கூறினார் என்றும் செய்திகள் கூறுகின்றன. அவரது இறுதி விருப்பத்தை நிறைவேற்ற வழியில்லாத வண்ணம் அவரது உறுப்புக்கள் வெகுவாக சிதைந்துவிட்டன என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார். ஆனால், அவர், தலைக்கவசம் (‘ஹெல்மெட்’) அணிந்திருந்ததால், அவரது கண்கள் எவ்விதத்திலும் அடிபடாமல் இருந்தன என்றும், அவரது கண்கள், தானத்திற்காக எடுத்துக்கொள்ளப்பட்டன என்றும் மருத்துவர்கள் அறிவித்தனர்.

உயிர் பிரியும் வேளையிலும் உறுப்பு தானம் பற்றி சிந்திக்கும் மனமுள்ளவர், ஓர் உன்னத மனிதர். பிறரை வாழவைக்கும் மனமுடையோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர் பொருட்டு மனிதம் நிலைத்து வாழும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.