2016-03-22 16:24:00

அ.பணி. Tomன் விடுதலைக்காக புனித வியாழனன்று செபம்


மார்ச்,22,2016. ஏமனில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட நான்கு அருள்சகோதரிகள் மற்றும் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ள இந்திய சலேசிய சபை அருள்பணியாளர் Tom Uzhunnalil அவர்களின் விடுதலைக்காக, இப்புனித வாரத்தில், சிறப்பாக, புனித வியாழன் திருவழிபாட்டிற்குப் பின்னர் செபிக்குமாறு கேட்டுள்ளார், உலகளாவிய சலேசிய சபைத் தலைவர் அருள்பணி Ángel Fernández Artime.  

சலேசிய சபை இணையத்தளத்தில் காணொளிச் செய்தி வழியாக சலேசிய சபையினர் அனைவரிடமும் இவ்வாறு கேட்டுள்ள அருள்பணி Artime அவர்கள், புனித வியாழன் திருவழிபாட்டிற்குப் பின்னர் இடம்பறும் திருநற்கருணை ஆராதனையில் இக்கருத்துக்காகச் செபிக்குமாறு கூறியுள்ளார்.

கேரள மாநிலத்தின் ராமபுரத்தில் பிறந்த 56 வயது அருள்பணி Tom Uzhunnalil அவர்கள், நான்காண்டுகளாக ஏமனில் மறைப்பணியாற்றி வந்தார். இம்மாதம் நான்காம் தேதியிலிருந்து இவர் ஜிகாதிகளிடம் உள்ளார். இந்த அருள்பணியாளரைக் கடத்தியிருப்பவர்கள், இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறந்ததை நினைவுகூரும் மார்ச் 25, வருகிற புனித வெள்ளியன்று, இவரைச் சித்ரவதைப்படுத்தி, கொலை செய்து, சிலுவையில் அறைவார்கள் என்று, எந்தவொரு அடிப்படையுமில்லாத வதந்தி ஒன்று   இந்தியாவில் பரவுவதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.