மார்ச்,22,2016. இத்தாலியில் புகலிடம் கேட்டுக் காத்திருக்கும், பல நாடுகளின் குடியேற்றதார இளையோரை வரவேற்கும் மையம் அமைந்துள்ள Castelnuovo di Portoக்கு, மார்ச் 24, வருகிற புனித வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தையின் இந்நிகழ்வு குறித்து அறிவித்த, நற்செய்தியை புதிய வழியில் அறிவிக்கும் திருப்பீட அவைத் தலைவர் பேராயர் ரீனோ ஃபிசிக்கெல்லா அவர்கள், Castelnuovo di Portoவில், புனித வியாழனன்று பன்னிரண்டு குடியேற்றதார இளையோரின் பாதங்களைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கழுவுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
இக்காலத்தில் அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் மக்கள் பற்றி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி சொல்லி வருவதையும் பேராயர் ஃபிசிக்கெல்லா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் இரக்கச் செயல்களாக, கடந்த டிசம்பரில், வீடின்றி இருக்கும் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து, தினமும் உணவு வழங்கும் Ostelloவிலுள்ள “don Luigi di Liegro” மையத்தில் புனிதக் கதவைத் திறந்து வைத்தார் திருத்தந்தை. கடந்த சனவரியில் முதியோர் இல்லம் ஒன்றைப் பார்வையிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த பிப்ரவரியில், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் மையம் ஒன்றிற்கும் சென்றார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |