2016-03-21 16:52:00

முன்னேற்றம் குறித்து மாற்று இலக்கணம் – கர்தினால் டர்க்சன்


மார்ச்,21,206. வளர்ச்சி அல்லது முன்னேற்றம் என்பது குறித்து நாம் கொண்டிருக்கும் புரிந்துகொள்ளுதலில் நல்ல மாற்றங்கள் இடம்பெறவேண்டும் என அழைப்பு விடுத்தார், திருப்பீட அதிகாரி, கர்தினால் பீட்டர் டர்க்சன்.

இயற்கையின் மீது அக்கறை கொள்ளவேண்டும் என்று அழைப்பு விடுக்கும், திருத்தந்தையின் 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடல் குறித்து, கனடாவின் டொரான்டோ புனித மைக்கிள் பல்கலைக் கழகத்தில், திருப்பீட நீதி, அமைதி அவைத் தலைவர், கர்தினால் டர்க்சன் அவர்கள் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.

இன்றைய உலகில் 'வளர்ச்சி' என்ற கருத்து, பொருளாதாரத்தையும், தொழில்நுட்பத்தையும் மட்டுமே சார்ந்ததாக மாறி, நன்னெறி மதிப்பீடுகளை ஒதுக்கித் தள்ளியுள்ளது என்றும், இலாபத்தையே தலையாய நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.

இவ்வுலகம், அனைவருக்கும் பொதுவானது, இயற்கை வளங்களால் அனைவரும் பயனடையவேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு, நம் முன்னேற்றம் அமையவேண்டும் என்று கூறிய கர்தினால் டர்க்சன் அவர்கள், வருங்காலத் தலைமுறையினரை மனதில் கொண்டு நாம் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

வளர்ச்சி குறித்த நம் தவறான எண்ணங்களும், அணுகு முறைகளும் மாற்றம்  பெற்று, அனைவரின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும் முழு வளர்ச்சிக்கு நம்மையே அர்ப்பணிக்கவேண்டும் என்றும் கர்தினால் டர்க்சன் அவர்கள் அழைப்பு விடுத்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.