2016-03-21 16:20:00

இயேசுவின் தாழ்ச்சி, அவரின் பாடுகளில் தன் உச்சத்தை எட்டியது


மார்ச்,21,2016. இயேசு கிறிஸ்து தன்னையே தாழ்த்திக் கொண்டது, அவரின் பாடுகளின்போது உச்சத்தை எட்டியது என, இஞ்ஞாயிறு குருத்தோலை திருவிழா திருப்பலியில் மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

30 வெள்ளிக் காசுகளுக்கு விற்கப்பட்டு, தன் சீடராலேயே முத்தமிட்டுக் காட்டிக் கொடுக்கப்பட்ட இயேசு, தன் சீடர்களால் தனிமையில் விடப்பட்டதுடன், படைவீரர்களால் எள்ளி நகையாடப்பட்டது குறித்து தன் மறையுரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரசியல் மற்றும் மதத் தலைவர்களால் இயேசு கிறிஸ்து, பாவியைப் போன்றும், அநீதியானவராகவும் நோக்கப்பட்டார் என்றார்.

எந்த மக்கள் அவரை சிறிது நாட்களுக்கு முன்னர் புகழ்ந்து பாடினார்களோ, அவர்களே அவரைக் குற்றஞ்சாட்டுவதுடன், அவருக்குப் பதிலாக ஒரு கொலையாளியை விடுவிக்கவும் வேண்டினர் எனவும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'சிலுவையிலிருந்து இறங்கி வா' என விடப்பட்ட சோதனைக்கு உட்படாமல், தன்னையே தாழ்த்தி, இறைவனின் உண்மை முகத்தை, அதாவது இரக்கத்தை இயேசு வெளிப்படுத்தினார் என்ற திருத்தந்தை, அவர் நமக்காக தம்மையே தாழ்த்தியதால், அவர் வழிகள் நம் வழிகளில் இருந்து வேறுபட்டவைகளாகத் தெரிகின்றன என மேலும் கூறினார்.

திருப்பலியின் இறுதியில் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை மாதம் போலந்தின் கிராக்கோவ் நகரில் 'இரக்கமுடையோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்' என்ற தலைப்பில் இடம்பெறும் உலக இளையோர் தினம் குறித்தும் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.