2016-03-19 16:13:00

திருப்பீடம்: உலக முன்னேற்றத்தில் பெண்களின் பங்களிப்பு


மார்ச்,19,2016. பெண்கள், உலகின் வளர்ச்சியால் பயனடைபவர்கள் மட்டுமே என்ற குறுகிய கண்ணோட்டத்திலிருந்து வெளிவந்து, அவர்களும் உலக வளர்ச்சிக்காக உழைப்பவர்கள் என்ற நோக்கு அதிகரிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார், ஐ.நா.விற்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர், பேராயர் பெர்னதித்தோ அவுசா.

'பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கும், நிலையான வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பு' என்பது குறித்து ஐ.நா.வில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் அவுசா அவர்கள், பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள், இன்றைய உலகில் மேலும் கொடூரமான வழிகளில் நிகழ்வது குறித்த கவலையை வெளியிட்டார்.

அமைதியை உருவாக்குவதில் பெண்களின் பங்களிப்பு, இவ்வுலகில் சரியான முறையில் அங்கீகரிக்கப்படவில்லை என்பதையும் எடுத்துரைத்த பேராயர் அவுசா அவர்கள், பொருளாதார முன்னேற்றத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் உலகில், குடும்ப மதிப்பீடுகள் ஒதுக்கி வைக்கப்படுவதால், பெண்கள் அதிக அளவில் துன்பங்களை அனுபவிக்கிறார்கள் என்றார்.

ஒவ்வொரு பெண்ணும் தன் தாய்மைப் பண்பு வழியாக, சமூகத்திற்கு வழங்கும் பங்களிப்பு சரியான முறையில் அங்கீகரிக்கப்படுகிறதா என்ற கேள்வியையும் முன்வைத்தார், திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் அவுசா.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.