2016-03-19 15:47:00

திருத்தந்தை : செபத்தின் உதவியின்றி எதுவும் ஆற்ற முடியாது


மார்ச்,19,2016. மனிதர்கள் நடுவிலிருந்து, மனிதர்களுக்காக, இறைவனால் தெரிவுச் செய்யப்பட்ட ஆயர்கள், கௌரவத்திற்காக அல்ல, மாறாக, பணிக்கென அழைப்புப் பெற்றவர்கள் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தென் ஆப்ரிக்கா, போட்ஸ்வானா, லெசோத்தோ மற்றும் நமீபியா ஆகிய நாடுகளின் திருப்பீடத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள அருள்பணி Peter Brian Wells,  பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் செயலராக நியமிக்கப்பட்டுள்ள அருள்பணி Miguel Angel Ayuso Guixot ஆகிய இருவரையும் ஆயர்களாக அருள்பொழிவு செய்த திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு எடுத்துரைத்தார்.

இச்சனிக்கிழமை, புனித யோசேப்பு திருவிழாவன்று, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை, மீட்பின் நற்செய்தியை அறிவிப்பதிலும், விசுவாச அருளடையாளங்கள் வழியாக விசுவாசிகளின் புனிதத் தன்மைக்கு உதவுவதிலும் ஆயர்களுக்கு இருக்கும் கடமைகளை சுட்டிக்காட்டினார்.

செபத்தின் உதவியின்றி நம்மால் எதுவும் ஆற்ற இயலாது என்பதையும் தன் மறையுரையில் புதிய ஆயர்களுக்கு எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்று, இச்சனிக்கிழமையோடு மூன்று ஆண்டுகள் நிறைவுற்றுள்ளன.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.