2016-03-16 16:56:00

வத்திக்கான் விண்வெளி ஆய்வு மையத்தின் 125ம் ஆண்டு நிறைவு


மார்ச்,16,2016. வத்திக்கான் விண்வெளி ஆய்வு மையம், மார்ச் 14ம் தேதி, இத்திங்களன்று 125ம் ஆண்டினை நிறைவு செய்துள்ளது என்று, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano அறிவித்துள்ளது.

1891ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி, திருத்தந்தை 13ம் லியோ அவர்கள், Ut mysticam என்ற பெயரில், தன் சுய விருப்பத்துடன் வெளியிட்ட ஓர் ஆணையின்படி, வத்திக்கான் விண்வெளி ஆய்வு மையம் நிறுவப்பட்டது.

கிரகோரியன் நாள்காட்டியின் காரணமாக இருந்த திருத்தந்தை 13ம் கிரகோரி அவர்கள், இயேசு சபை அருள் பணியாளர்களின் ஒத்துழைப்போடு, 1578ம் ஆண்டு உருவாக்கிய காற்றுகளின் கோபுரம் (Tower of the Winds) என்ற முயற்சி, விண்வெளியில் கத்தோலிக்கத் திருஅவையின் ஆர்வத்தைக் காட்டும் ஓர் அடையாளம் என்று வத்திக்கான் நாளிதழ் கூறியுள்ளது.

விண்வெளி ஆய்வு குறித்து கத்தோலிக்கத் திருஅவை பல்வேறு பிரச்சனைகளைச்  சந்தித்தாலும், 1891ம் ஆண்டு, விண்வெளி ஆய்வு மையத்தை நிறுவுவதில் திருத்தந்தை 13ம் லியோ அவர்கள் உறுதியாக இருந்தார் என்பதையும் இக்கட்டுரை தெளிவுபடுத்தியுள்ளது.

உரோம் நகரில் இயேசு சபையினரால் உருவாக்கப்பட்டு, திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தல் கந்தோல்ஃபோவுக்கு (Castel Gandolfo) அருகே இயங்கிவரும் வத்திக்கான் விண்வெளி ஆய்வு மையம், தற்போது, இயேசு சபை அருள்சகோதரர் Guy Consolmagno என்பவரின் தலைமையில் இயங்கிவருகிறது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.