2016-03-15 17:05:00

2000 கத்தோலிக்கரைக் காப்பாற்றிய பாகிஸ்தான் இளைஞருக்கு அஞ்சலி


மார்ச்,15,2016. கடந்த ஆண்டு பாகிஸ்தான் லாகூரில் கத்தோலிக்கக் கோவிலில் தாக்குதல் நடத்த முயன்ற இஸ்லாம் தீவிரவாதியை தடுத்து நிறுத்தும் முயற்சியில் தன் உயிரைத் தியாகம் செய்த இளைஞர் ஒருவரை மறைசாட்சியாக அறிவிக்க வேண்டும் என, திருஅவையை விண்ணப்பித்துள்ளனர், அப்பகுதி கத்தோலிக்கர்கள்.

லாகூரின் புனித யோவான் கத்தோலிக்கக் கோவிலில் சுயவிருப்பப் பாதுகாப்புப் பணியாளராகப் பணியாற்றிய 20 வயது ஆகாஷ் பஷீர் என்ற இளைஞர், வெடிகுண்டுடன் வந்த தீவிரவாதி ஒருவரை தடுத்து நிறுத்திய வேளையில், அத்தீவிரவாதி குண்டை வெடிக்க வைத்து, தன் உயிரை மாய்த்துக் கொண்டதுடன், அக்கத்தோலிக்க சுய விருப்பப் பணியாளரும் உயிர் இழந்தார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15ம் தேதி இடம்பெற்ற இத்துயரச் சம்பவத்தின் ஓராண்டு நினைவாக இம்மாதம் 13ம் தேதி ஞாயிறன்றும், 15ம் தேதியும், அதே புனித யோவான் கோவிலில் வழிபாடுகளை நடத்திய கத்தோலிக்கர்கள், இளைஞர் பஷீரை, கத்தோலிக்க மறைசாட்சி என திருஅவை அறிவிக்க வேண்டும் என விண்ணப்பித்தனர்.

கோவிலினுள் செப வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 2000க்கும் மேற்பட்ட கத்தோலிக்கர்களின் உயிரைக் காப்பாற்ற தன் உயிரை, கடந்த ஆண்டில் கையளித்த 20 வயது இளைஞர் பஷீரை புனிதராக அறிவிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என அழைப்பு விடுத்தார், புனித யோவான் கோவில் பங்கு தந்தை பிரான்சிஸ் குல்சார்.

புனித யோவான் கோவிலுக்கு வெளியே நடந்த இந்தத் தாக்குதலில் பஷீருடன் உயிரிழந்த 15 பேருக்கும் லாகூர் பேராயர் செபஸ்டியான் ஷா அவர்களின் தலைமையில் நிறைவேற்றப்பட்ட நினைவுத் திருப்பலியில் 3000க்கும் மேற்பட்ட விசுவாசிகள் கலந்து கொண்டனர்.

ஆதாரம்: UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.