2016-03-14 17:04:00

இது இரக்கத்தின் காலம் - சமாதானத்தை ஏற்படுத்தும் பொய்


அரசர் ஒருவரிடம், குற்றவாளி ஒருவரை, சிலர் கொண்டுவந்து நிறுத்தினர். அரசே, இவன் வேற்று நாட்டைச் சேர்ந்தவன், நமக்குப் புரியாத மொழி பேசுகிறவன் என்று சொல்லி, அக்குற்றவாளி செய்த குற்றத்தை அரசரிடம் விவரித்தனர். அதைக் கேட்ட அரசர், குற்றவாளிக்குத் தூக்குத்தண்டனை விதித்தார். உடனே, அக்குற்றவாளி தனது மொழியில் அரசரைத் திட்டினார். அரசருக்கு ஒன்றும் புரியவில்லை. அமைச்சரை அருகில் அழைத்து, இவன் என்ன சொல்கிறான் என்று கேட்டார் அரசர். ஒரு கணம் சிந்தித்த அமைச்சர், அரசே, கோபத்தை அடக்கி, பிறரை மன்னிப்பதே சொர்க்கம் என்கிறான் என்று சொன்னார். சற்று சிந்தித்த அரசரின் மனம் மாறியது. பின்னர், அங்கிருந்தவர்களிடம், இக்குற்றவாளிக்கு நான் கொடுத்த தண்டனையைத் தள்ளுபடி செய்கிறேன், இவனை மன்னித்து விடுகிறேன் என்றார். அருகில் நின்றுகொண்டிருந்த மற்றோர் அமைச்சருக்கு இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மெல்ல அரசர் காதருகில் சென்று, அந்த அமைச்சர் சொன்னது பொய். இப்போது நான் உங்களிடம் சொல்வதுதான் உண்மை. இந்த அந்நியன் உங்களைத் தனது மொழியில் கோபமாகத் திட்டினான் என்றார். புன்னகையோடு இந்த அமைச்சரைப் பார்த்த அரசர், அமைச்சரே, நீங்கள் கூறிய உண்மையைவிட, அந்த அமைச்சர் கூறிய பொய் எனக்கு மகிழ்வைத் தருகிறது என்றார். உண்மையைச் சொன்ன அமைச்சர் உறைந்துபோய் நின்றார். மீண்டும் அரசர் சொன்னார் – சமாதானத்தை ஏற்படுத்தும் பொய், சண்டைகளை ஏற்படுத்தும் உண்மையைவிட மேலானது என்று. இது இரக்கத்தின் காலம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.