2016-03-12 15:59:00

திருத்தந்தையின் மறைக்கல்வி: சேவை வழி இரக்கமே, இயேசுவின் வழி


மார்ச்,12,2016. ஒவ்வொரு வாரமும் புதனன்று, தூய பேதுரு வளாகத்தில் கூடிவரும் மக்களுக்கு மறைக்கல்வி உரையை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டில், மாதத்தில் ஒரு சனிக்கிழமையன்று சிறப்பு மறைக்கல்வி உரையையும், மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமையன்று ஏதாவது ஒரு பிறரன்பு இல்லத்தை சந்திப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். அதன்படி, இம்மாதம், இச்சனிக்கிழமையன்று தன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'இரக்கமும் சேவையும்' என்ற தலைப்பில் தன் கருத்துக்களை விசுவாசிகளோடு பகிர்ந்து கொண்டார்:

இறை இரக்கத்தின் இந்த யூபிலி ஆண்டில், புனித வாரத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் நாம், இயேசு தன் சீடர்களின் பாதங்களைக் கழுவிய நிகழ்வைக் குறித்து நம் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்வோம். நம் உள்ளத்தை ஆழமாகத் தொடும் இந்த தாழ்ச்சிப் பணியில், இயேசு தன் சீடகளையும் நம்மையும் நோக்கி, நாம் ஒவ்வொருவரும் மற்றவருக்கு இத்தகைய பணியை ஆற்றவேண்டும் என்று கூறுகிறார். அவரின் அன்பெனும் புதியக் கட்டளையின் தெளிவான எடுத்துக்காட்டையும் முன்வைக்கிறார். புனித யோவான் கூறுவதுபோல், இயேசு எவ்வாறு நமக்காக தன் உயிரைக் கையளித்தாரோ, அதேபோல் நாமும், ஒருவர் மற்றவருக்காக நம் உயிரையும் தர முன்வரவேண்டும் (1 யோவான் 3:16). நம் சகோதர சகோதரிகளுக்கு, குறிப்பாக, அதிக உதவித் தேவைப்படுவோருக்கு, தாழ்ச்சியுடனும், ஆர்ப்பாட்டமில்லாலும், மறைவாகவும் செய்யும் சேவையே அன்பு என்பதை இயேசு நமக்குக் காண்பிக்கிறார். தன்னையே வளைத்து, குனிந்து, தன் சீடர்களின் பாதங்களைத் தொட்டு கழுவியதன் வழியாக, இயேசு நமக்கொரு அழைப்பை முன் வைக்கிறார். நம் தோல்விகளை நாம் ஏற்கவும், ஒருவர் ஒருவருக்காக செபிக்கவும், இதயத்திலிருந்து மற்றவரை மன்னிக்கவும் நமக்கு விடப்படும் அழைப்பே அது. 'தந்தையைப்போல் இரக்கமுள்ளவராக இருத்தல்' என்பது, தாழ்ச்சியுடன் கூடிய சேவையில் இயேசுவை நம் தினசரி வாழ்வில் பின்பற்றுவதாகும் என்பதை, அவரே நமக்குக் காண்பிக்கிறார்.

இவ்வாறு, தன் சிறப்பு மறைக்கல்வி உரையை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.