2016-03-12 15:32:00

தவக்காலம் 5ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


மார்ச் மாதம் என்றதும், வசந்தகாலம் பற்றிய எண்ணங்கள் மனதில் வலம் வருவது இயல்பு. வசந்த காலம் என்று சொன்னதும், வண்ண, வண்ண மலர்களால் நிறைந்த ஒரு கற்பனை உலகம் மனதில் நிறைகிறது. வருடம் முழுவதும் வசந்த காலமாகவே இருந்துவிட்டால் நலமாக இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால், இயற்கைச் சுழற்சியில் வசந்தம், கோடை, இலையுதிர், குளிர் என்ற நான்கு காலங்கள் ஒன்றையொன்று தொடர்ந்தால் மட்டுமே, இந்த பூமிக்கோளம் உயிர் வாழமுடியும். நம் சுயநலத்தால், பூமிக் கோளத்தை கூடுதல் வெப்பமடையச் செய்து, இந்த நான்கு காலங்களின் அழகியச் சுழற்சியைத் தடுமாறச் செய்கிறோம் என்பதையும் இவ்வேளையில் நினைவில் கொள்வோம்.

சென்ற ஞாயிறை, 'மகிழும் ஞாயிறு' என்று கொண்டாடியபோது, துன்பமும், இன்பமும், மாறி, மாறி வருவதுதான் மனித வாழ்க்கை என்று நம் சிந்தனைகளைத் துவக்கினோம். மனித வாழ்வில் நாம் சந்திக்கும் மற்றொரு அனுபவத்தை இன்று சிந்திப்போம். அதுதான், நம்மைத் தேடிவரும் பிரச்சனைகள். பிரச்சனைகளைக் கண்டு ஓடி ஒளியலாம், கோபத்தோடு எதிர்கொண்டு, பிரச்சனைகளைப் பெரிதாக்கலாம். அல்லது, நிதானமாய், தெளிவாய், சிந்தித்து, சிக்கலைத் தீர்க்கலாம். தன்னைத் தேடி வந்த ஒரு பிரச்னையை, இயேசு சமாளித்த அழகை இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்கிறது.

இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகள், விடியற்காலைப் பொழுதை சித்திரிக்கின்றன (யோவான் 8:2-3). நம்மில் பலர், காலையில் எழுந்ததும், கோவிலுக்குப் போவது, யோகாசனம் செய்வது, அல்லது உடற்பயிற்சிக்காக நடப்பது, ஒரு கப் காப்பியை வைத்துக்கொண்டு செய்தித்தாளைப் படிப்பது.... என அமைதியான செயல்களிலேயே காலைப்பொழுதைச் செலவழிப்போம். அவ்வேளையில், மனதைக் கஷ்டப்படுத்தும், கோபப்படுத்தும் செயல்களில் பொதுவாக ஈடுபடுவதில்லை.

இயேசுவும் அதைத்தான் செய்தார். முந்திய இரவு ஒலிவ மலைக்குச் சென்ற இயேசு, பொழுது விடிந்ததும், கோவிலுக்குத் திரும்பினார் என்று, இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகள் சொல்கின்றன. எதற்காக? இரவு முழுவதும் செபத்தில் தான் சந்தித்த தந்தையை மக்களுக்கு அறிமுகம் செய்ய, அவர் கோவிலுக்கு வந்திருந்தார்.

அந்த அமைதியானச் சூழலில், புயல் ஒன்று இயேசுவை நெருங்கியது. மறை நூல் அறிஞர், பரிசேயர் வடிவில் வந்த புயல் அது. விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை இழுத்துக்கொண்டு வந்தது அந்த கும்பல். விடிந்ததும், ஒரு வழக்கை ஆரம்பிக்க இவர்கள் வந்திருந்தனர் என்றால், இரவு முழவதும் அவர்கள் சதித் திட்டத்தில் நேரத்தை வீணடித்திருக்க வேண்டும் என்று சிந்திக்கத் தோன்றுகிறது. இயேசுவை எப்படியும் மடக்கவேண்டும், அடக்கவேண்டும் என்பதே அவர்களுக்கு வாழ்க்கைப் பிரச்சனையாக மாறிவிட்டது. அவர்களது சதிக்குப் பயன்படுத்திய பகடைக்காய், ஒரு பெண்.

உடலளவில் அந்தப் பெண்ணைப் பயன்படுத்திவிட்டு ஓர் ஆண் ஓடிப்போயிருக்க வேண்டும். அவன் அங்கு இழுத்துவரப்பட்டதாக நற்செய்தி சொல்லவில்லை. பரிசேயரும், மறைநூல் அறிஞரும், தங்கள் ஆணவ விளையாட்டில், அந்தப் பெண்ணை மட்டும் ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த, இழுத்து வந்திருக்கிறார்கள். இது சிந்திக்க வேண்டிய ஒரு கருத்து.

இன்னொரு மனிதரை சொந்த நலனுக்காகப் பயன்படுத்துவதை விட பெரிய பாவம் உலகில் இல்லை. ஆழமாய் அலசிப்பார்த்தால், பாவங்கள் என்று நாம் பட்டியலிடும் பல செயல்களில், இறுதியில், இந்த உண்மை ஒன்றே, பின்னணியில் இருக்கும்... மற்றொரு மனிதப்பிறவியை நம் சுயநலத்திற்குப் பயன்படுத்துவது, பலியிடுவது மிகப்பெரிய பாவம்.

பொருட்களைப் பயன்படுத்துகிறோம், பயன் தீர்ந்ததும் குப்பையில் எறிகிறோம். பொருட்களைப் பயன்படுத்துவதில்கூட நாம் கவனமாக இருக்கவேண்டும் என்று அண்மையக் காலங்களில் பேசி வருகிறோம். நம் சுயநலத்தின் வெளிப்பாடாக வளர்ந்துள்ள 'தூக்கியெறியும் கலாச்சார'த்தைக் குறித்தும், இயற்கைச் சீரழிவைக் குறித்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பல நேரங்களில் பேசி, நம் மனசாட்சியைத் தட்டியெழுப்பி வருகிறார். 'இறைவா உமக்குப் புகழ்' என்ற திருமடலிலும் இக்கருத்தை அழுத்தந்திருத்தமாகக் கூறியுள்ளார்.

பொருட்களையும், இயற்கையையும் பயன்படுத்துவதிலேயே இவ்வளவு கவனம் தேவை என்று சொல்லும்போது, மனிதர்களைப் பயன்படுத்துவதில் எவ்வளவு கவனம் தேவைப்படுகிறது?... ‘மனிதரைப் பயன்படுத்துதல்’ என்ற சொற்றொடரே அவலமான கருத்து. மனிதர்களோடு பழகுவது, வாழ்வது என்பதுதான் நாம் பயன்படுத்த வேண்டிய சொற்கள்... ஆனால், நாம் வாழும் இன்றைய உலகில் பொருட்களும், மிருகங்களும் போற்றிப் பாதுகாக்கப்படுகின்றன. மனிதர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். இதுதான் அன்று இயேசுவுக்கு முன் நடந்தது.

விபச்சாரத்தில் ஒரு பெண்ணைக் கையும் மெய்யுமாகப் பிடித்துவந்ததாகக் கூறுகின்றனர், பரிசேயரும், மறைநூல் அறிஞரும். இவர்கள் ஏன் இயேசுவிடம் வர வேண்டும்? இவர்களுக்குத்தான் சட்டங்களெல்லாம் தலைகீழாய்த் தெரியுமே! அந்தப் பெண்ணைத் தண்டிக்கும் அதிகாரமும் அவர்களுக்கு உண்டே... பின் எதற்கு இந்த நாடகம்? இயேசுவை எப்படியும் மடக்கவேண்டும் என்பதே அவர்களின் எண்ணம். அதற்கு இது ஒரு வாய்ப்பு. அந்த பெண்ணோ, சட்டங்களோகூட முக்கியமில்லை.

நான் பல ஆண்டுகளுக்கு முன் பார்த்த ஒரு நாடகம் என் நினைவுக்கு வருகிறது. அந்த நாடகத்தை எழுதியவர், இயேசுவை ஒரு புரட்சியாளராகவே அதிகம் காட்டினார். அந்த நாடகத்தில், இன்றைய நற்செய்தி நிகழ்வு, ஒரு காட்சியாகக் காட்டப்பட்டது. நாடக ஆசிரியர் வடித்திருந்தக் காட்சியில், இயேசு, பரிசேயரிடம் ஒரு கேள்வி கேட்பார். "இந்தப் பெண்ணை, விபச்சாரத்தில், கையும் மெய்யுமாகப் பிடித்ததாகச் சொல்கிறீர்களே. அப்படியானால், அந்த ஆண் எங்கே?" என்று இயேசு கேட்க, அவர்கள் மௌனமாகிப் போவார்கள்.

இயேசுவின் இந்தக் கேள்வி, யோவான் நற்செய்தியில் கொடுக்கப்படவில்லை. உண்மைதான். ஆனால், கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால், இயேசு, இப்படி ஒரு கேள்வியைக் கட்டாயம் எண்ணிப் பார்த்திருப்பார். அதிலும் முக்கியமாக, பரிசேயர்கள், கல்லால் எறியவேண்டும் என்ற சட்டத்தை இயேசுவுக்கு நினைவுபடுத்தியபோது, இக்கேள்வி கட்டாயம் அவருக்குள் எழுந்திருக்கும். மோசேயின் சட்டப்படி, விபச்சாரத்தில் ஈடுபடும் இருவரும் கொலை செய்யப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. (லேவியர் நூல் 20:10) அப்படியிருக்க, அந்த ஆணை அவர்கள் இழுத்து வந்ததாகக் கூறவில்லை. ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி என்ற அளவில் மறைநூல் அறிஞரும், பரிசேயரும் மோசே சட்டத்தை மாற்றியமைத்து விட்டனர். இவ்விதம், ஒரு பெண்ணையும், மோசே சட்டத்தையும் பகடைக் காய்களாக்கிய பரிசேயரையும், மறைநூல் அறிஞர்களையும் வேதனையோடு நினைத்து, பரிதாபப்பட்டு, இயேசு மௌனமாகிப்போனார். ஆனால், அவர்கள் விடுவதாயில்லை. மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே, அவர் ஒரே ஒரு வாக்கியத்தை மட்டும் சொன்னார்: “உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்.”  (யோவான் 8: 7)

இயேசுவுக்கு சவால்விட வந்திருந்த பரிசேயருக்கும், மறைநூல் அறிஞருக்கும் இது பெரும் மரண அடி. முதியோர் தொடங்கி, எல்லாரும் போக வேண்டியதாயிற்று. இறுதியாக, அப்பெண் மட்டும் தனித்து விடப்படுகிறார். இயேசு அந்தப் பெண்ணை மன்னித்து அனுப்புகிறார். இயேசு அப்பெண்ணுக்கு மன்னிப்பு வழங்கியபோது, "இனி பாவம் செய்யாதே" என்று சொல்லி அனுப்புகிறார். அதை அவர் சொல்லவில்லை என்றாலும், இப்படி ஒரு சம்பவத்திற்குப் பிறகு, அப்பெண், முற்றிலும் மாறிய ஒரு வாழ்வை ஆரம்பித்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

நிபந்தனையற்ற அன்பு நம் வாழ்வில் ஆற்றக்கூடிய புதுமைகள் உணர்ந்து பார்க்க வேண்டியவை. இறைவனின் நிபந்தனையற்ற அன்பை வாழ்ந்து பார்க்க முயல்வோம். சலிப்பின்றி மன்னிப்பவரே இறைவன் என்ற உண்மையை, சலிப்பின்றி மீண்டும், மீண்டும் நினைவுறுத்திவரும் திருத்தந்தையின் சொற்கள், நம் உள்ளங்களுக்கு நம்பிக்கை ஊட்டட்டும். இரக்கத்தின் யூபிலி ஆண்டில், சோர்வின்றி, சலிப்பின்றி இறைவனின் இரக்கத்தை நாடி, மீண்டும், மீண்டும் வருவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.