2016-03-12 16:30:00

சட்ட வழிமுறைகளை எளிதாக்கி, வாழ்வையும் எளிதாக்குங்கள்


மார்ச்,12,2016   அகில உலகத் திருஅவையின் நீதிமன்றமாக விளங்கும் 'ரோத்தா ரொமானா' (Rota Romana) அவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சியாளர் வகுப்பில் கலந்துகொண்டோரை இச்சனிக்கிழமையன்று காலை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மைக் காலங்களில் திருஅவையின் திருமணச்சட்டங்களில் முன்வைக்கப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

திருமணத்தை, செல்லுபடியாகாது என அறிவிக்கும் திருஅவையின் வழிமுறைகளால், பல தம்பதியர் சட்ட அமைப்பு முறைகளை அணுகமுடியாத நிலை இருப்பதையும், பலர் அருளடையாளங்களைப் பெறுவது குறித்த சந்தேகத்திலேயே வாழும் நிலைகள் நிலவுவதையும் தன் உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதனாலேயே, திருவையின் இந்த வழிகள் எளிதாக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டதாக எடுத்துரைத்தார்.

சட்ட வழிமுறைகளால் துன்புறும் இம்மக்களின் நீதியான, நியாயமான, ஏக்கத்தை புரிந்துகொள்ளும் திருஅவை, பிறரன்பு மற்றும் இரக்கத்துடன், அவர்கள் அருகில் இருக்க ஆவல் கொள்கின்றது எனவும் 'ரோத்தா ரொமானா' அங்கத்தினர்களிடம் கூறிய திருத்தந்தை, தங்களின் திருமண நிலைப்பாடு குறித்து தெளிவாக அறிய விரும்பும் மக்களை, அதாவது, திருமண பந்தத்தில் பிரிவுறும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் கிறிஸ்தவ தம்பதியரை, இரக்கத்துடன் அணுகுவதே புதிய பரிந்துரைகளின் நோக்கம் என்றார். திருமணம் செல்லுபடியாகாது என்பதற்கான திருஅவை சட்ட வழிமுறைகளின் பல்வேறு நிலைகளிலும் தீர்ப்பு உறுதிச்செய்யப்படவேண்டும் என்ற நிலைகளை மாற்றி, தற்போது, மறைமாவட்ட ஆயருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பது, வழக்கில், காலதாமதத்தைக் குறைப்பதற்கான வழிமுறைகளுள் ஒன்று, எனவும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

பிரிந்து வாழும் குடும்பங்கள், இயல்பான வாழ்வை மேற்கொள்வதற்கு உதவும் நோக்கில், நீதியிலும் பிறரன்பிலுமான சேவைகள், அவர்களுக்கு திருஅவையின் திருமண சட்ட அமைப்பு முறைகளால் வழங்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.