2016-03-11 15:55:00

நல்ல சமாரியரின் பரிவு, கிறிஸ்தவத்தின் இதயம்– தியானச் சிந்தனை


மார்ச்,11,2016. நல்ல சமாரியர் காட்டிய பரிவு ஒவ்வொரு கிறிஸ்தவரிடமும் குடிகொள்ள வேண்டும் என்று, திருப்பீட அதிகாரிகளின் ஆண்டு தியானத்தை வழிநடத்திய அருள்பணியாளர் எர்மேஸ் ரோன்கி அவர்கள் கூறினார்.

உரோம் நகரின் புறநகரில் அமைந்துள்ள அரிச்சா தியான இல்லத்தில், திருத்தந்தையும் ஏனைய திருப்பீட அதிகாரிகளும் மேற்கொண்ட தவக்காலத் தியானத்தின் ஐந்தாம் நாள் சிந்தனைகளை வழங்கிய அருள்பணி ரோன்கி அவர்கள், துயருறுவோர் மீது அக்கறை கொள்வதே உண்மை கிறிஸ்தவரின் இலக்கணம் என்று கூறினார்.

கல்வாரியில் சிலுவையில் தொங்கிய வேளையில், தன் துன்பத்தின் மீது கவனம் கொள்ளாமல், அருகே துன்பப்பட்ட கள்வர் மீது இயேசுவின் கவனம் திரும்பியது என்றும், உயிர்த்தபின், கல்லறை அருகே கண்ணீர் வடித்த மகதலா மரியாவின் கண்ணீரைத் துடைப்பதில் இயேசு கவனம் செலுத்தினார் என்றும் அருள்பணி ரோன்கி அவர்கள் எடுத்துக்காட்டுகளைக் கூறினார்.

ஒருவருடைய தகுதி, தவறு என்ற கோணங்களில் சிந்திக்காமல், ஒவ்வொருவரின் உள்ளார்ந்த இயல்பைச் சந்திக்க விழைவதே, இயேசுவின் குறிக்கோளாக இருந்ததென்று தியானப் போதகர், அருள்பணி ரோன்கி அவர்கள் எடுத்துரைத்தார்.

நல்ல சமாரியர் உவமையைச் சுட்டிக்காட்டிய அருள்பணி ரோன்கி அவர்கள், பரிவு என்பது, ஒருவரைக் கண்டு, பரிதாபப்பட்டு, விலகிச் செல்வது அல்ல, மாறாக, அவரைத் தொட்டு, தூக்கியெடுத்து உதவிகள் செய்வது என்பதைத் தெளிவுபடுத்தினார்.

காயமடைந்திருக்கும் ஒருவரை நாம் தொட்டு, அவரது கண்ணீரைத் துடைப்பதால், இவ்வுலகின் அநீதியான அமைப்பு முறைகளில் மாற்றம் வந்துவிடாது என்று கூறிய அருள்பணி ரோன்கி அவர்கள், இருப்பினும், அநீதிகளால் அவதியுறும் உலகை மாற்றமுடியும் என்ற சிறு நம்பிக்கையை நம் செயல்கள் விளைவிக்கக்கூடும் என்று தன் உரையின் இறுதியில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.