2016-03-11 16:04:00

சொல்லித் தருவதை வாழ்வில் கடைபிடிக்க அழைப்பு


மார்ச்,11,2016. கத்தோலிக்க ஆசரியர்களும், இறையியலாளர்களும் தாங்கள் சொல்லித் தருவதை வாழ்வில் கடைபிடிப்பது மட்டுமே அவர்களை நம்பிக்கைக்குரிய சாட்சிகளாக மாற்றும் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

கத்தோலிக்கக் கல்வி திருப்பேராயத்தின் தலைவரான கர்தினால் ஜியூசெப்பே வெர்சால்தி (Giuseppe Versaldi) அவர்கள், மணிலாவின், அத்தனேயோ பல்கலைக் கழகத்தில் (Ateneo de Manila University) இவ்வியாழனன்று வழங்கிய ஓர் உரையில் இவ்வாறு கேட்டுக்கொண்டார் என்று UCAN செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

அண்மையில், ஏமன் நாட்டில் கொலை செய்யப்பட்ட அருள்சகோதரிகளைக் குறித்து தன் உரையில் குறிப்பிட்ட கர்தினால் வெர்சால்தி அவர்கள், அந்த நான்கு அருள்சகோதரிகளும், தங்கள் மத நம்பிக்கைக்கும், துறவு வாழ்வுக்கும் தங்கள் உயிரை வழங்கி, சாட்சியம் பகர்ந்தனர் என்று கூறினார்.

இறையியல் கருத்துக்களில் நீதியைப் பற்றி கூறுகையில், மார்க்ஸியக் கொள்கைகளைப் பற்றி இனி பேசத் தேவையில்லை, ஏனெனில், இயேசுவே தன் நற்செய்தியில் இத்தகையக் கொள்கைகளைக் கூறியுள்ளார் என்று கர்தினால் வெர்சால்தி அவர்கள் எடுத்துரைத்தார்.

விவிலியத்தின் அடிப்படையில் விடுதலை இறையியலை சொல்லித் தருவது, இறையியல் ஆசிரியர்களின் கடமை என்பதையும் கர்தினால் வெர்சால்தி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் :  UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.