2016-03-11 15:37:00

எளியச் சூழல்களில் இடம்பெறும் உன்னதம் – தியானச் சிந்தனை


மார்ச்,11,2016. திருத்தந்தைக்கும், திருப்பீட அதிகாரிகளுக்கும் தவக்காலத் தியானம் வழங்கும் அருள்பணி எர்மேஸ் ரோன்கி அவர்கள், இறைவன் எப்போதும் மனிதரோடு குடிகொள்கிறார் என்ற மறையுண்மையை, அன்னை மரியா, நாசரேத்தில், இயேசுவுடன் வாழ்ந்த 30 ஆண்டுகள், தன் அனுபவத்தில் உணர்ந்தவர் என்று, தன் இறுதி தியான உரையில் கூறினார்.

தவக்காலத் தியானத்தின் இறுதி உரையை, இவ்வெள்ளி காலை வழங்கிய அருள்பணி ரோன்கி அவர்கள், அன்னை மரியாவுக்கு விண்ணகத் தூதர், கிறிஸ்து பிறப்பைக் குறித்து அறிவித்த நிகழ்வை தன் உரையின் மையமாக்கினார்.

இறைவன் எளிமையை விரும்புகிறவர் என்பதால், கிறிஸ்துவின் பிறப்பு என்ற மிக உன்னதமான மறையுண்மை, மிக, மிக எளியதொருச் சூழலில் வெளிப்படுத்தப்பட்டது என்று கூறிய அருள்பணி ரோன்கி அவர்கள், நம் வாழ்விலும் இத்தகைய உன்னத நிகழ்வுகள், எளியச் சூழல்களில் இடம்பெறுகின்றன என்று எடுத்துரைத்தார்.

ஒருவர் வாழும் இல்லம் என்பது, ஒருவரை மிக இயல்பாக இருக்கச் செய்யும் ஓர் இடம் என்பதால், அங்கு, இறைவன் இளம்பெண் மரியாவைச் சந்திக்க வந்தார் என்று அருள்பணி ரோன்கி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

நமது சமயலறையில் உள்ள பாத்திரங்களில் கடவுள் இருக்கிறார் என்று அவிலா நகர் புனித தெரேசா தன் துறவுசபை அருள்சகோதரிகளுக்குக் கூறியதை நினைவுபடுத்திய அருள்பணி ரோன்கி அவர்கள், மிகச் சாதாரணச் சூழல்களில் நாம் இறைவனை அடையாளம் கண்டுகொள்ளத் தவறுகிறோம் என்று கூறினார்.

மார்ச் 6, இஞ்ஞாயிறு மாலை முதல், உரோம் நகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள அரிச்சா விண்ணகப் போதகர் இல்லத்தில் திருத்தந்தையும், திருப்பீட அதிகாரிகளும் மேற்கொண்ட தவக்கால தியானம், மார்ச் 11, இவ்வெள்ளி மதியம் முடிவடைந்தது.

 ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.