2016-03-11 15:46:00

அன்பின் எதிர் நிலை, வெறுப்பு அல்ல, அக்கறையின்மை


மார்ச்,11,2016. திருத்தந்தையும், ஏனைய திருப்பீட அதிகாரிகளும் மேற்கோண்டிருந்த தவக்காலத் தியானத்தில், மரியின் ஊழியர் சபை அருள்பணியாளர், எர்மேஸ் ரோன்கி அவர்கள், இவ்வியாழன் மாலை வழங்கிய உரையில், அன்பின் எதிர் நிலை, வெறுப்பு அல்ல, மாறாக, அக்கறையின்மையே என்று கூறினார்.

உயிர்ப்புக்கும், தூய ஆவியாரின் வருகைக்கும் இடைப்பட்ட நாட்களில் இயேசு தன் சீடர்களைச் சந்தித்த நிகழ்வுகளை அடித்தளமாகக் கொண்டு, அருள்பணி ரோன்கி அவர்கள் தன் சிந்தனைகளை வழங்கினார்.

நாம் உன்னதமானவர்கள் என்பதால் இறைவன் நம்மீது அன்புகொள்வதில்லை, மாறாக, நாம் நேரிய உள்ளத்துடன் வாழ்வுப் பாதையில் பயணிக்கிறோம் என்பதையே அவர் நோக்குகிறார் என்று அருள்பணி ரோன்கி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இறைவன் மீது நாம் கொள்ளும் நம்பிக்கை, அவர் மீது நாம் கொள்ளும் அன்புடன் பின்னிப் பிணைந்தது என்று கூறிய அருள்பணி ரோன்கி அவர்கள், இன்றைய உலகம், குறிப்பாக, மேற்கத்திய உலகம், அன்பின் மீது நம்பிக்கை வைப்பதில்லை என்று எடுத்துரைத்தார்.

இறைவன் மீது நாம் கொள்ளும் அன்பு, ஓர் அடிமையைப் போல், அவரைக் கண்டு பயந்து உருவாகும் அன்பு அல்ல, மாறாக, நம் முழு சுதந்திரத்துடன் உடல், மனம், ஆன்மா ஆகிய அனைத்தின் வழியாகவும் அவர் மீது நாம் கொள்ளும் அன்பு என்று அருள்பணி ரோன்கி அவர்கள் தன் சிந்தனையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.