2016-03-10 16:14:00

புனிதர்களை அறிவிக்கும் திருப்பேராய வழிமுறைகளில் மாற்றங்கள்


மார்ச்,10,2016. புனிதர்களையும் அருளாளர்களையும் அறிவிப்பதற்கு முன் நடைபெறும் வழிமுறைகளில் மாற்றங்களை உருவாக்கி, புதிய சட்டங்கள் இவ்வியாழனன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

புனிதர் நிலைக்கு உயர்த்தும் திருப்பேராயத்திற்கென 1983ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி, திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்கள், புதிய சட்டங்களை வகுத்து அறிக்கையொன்றை வெளியிட்டார்.

தற்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த சட்டங்களுக்குப் பதிலாக புதிய சட்டங்களை அறிமுகம் செய்துள்ளார். புனிதர் மற்றும் அருளாளர் நிலைக்கு உயர்த்தும் வழிமுறைகளுக்கு ஆகும் செலவுகளை மனதில் கொண்டு, அவற்றைக் குறைக்கும் வழிகள் அமலாக்கப்பட்டுள்ளன.

இப்புதிய சட்டங்கள் வழியே, தலத்திருஅவையின் ஆயர்களும், புனிதர் நிலையை பரிந்துரைப்போரும் கூடுதல் பொறுப்புகளைப் பெறுவர் என்று தெளிவாகிறது.

புனிதர் மற்றும் அருளாளர் ஆகியோரைப் பரிந்துரைக்கத் திரட்டப்படும் நிதியில், ஒளிவு மறைவற்ற வழிமுறைகள் இடம்பெறுவதையும், புதியச் சட்டங்கள் உறுதிப்படுத்துகின்றன.

மேலும், இந்த வழிமுறைகளை நடத்துவதற்குப் போதிய நிதி இல்லாதவர்களுக்கு உதவி செய்யும் வகையில் திருப்பேராயத்தில் நிதியொன்று உருவாக்கப்படும் என்றும் புதிய சட்டங்கள் கூறுகின்றன.

'இறைவன் தன் இரக்கத்தால் நம்மை அணைக்கிறார். தேவையில் உள்ளவர்களுக்கு, இறைவனின் இரக்கம்நிறை அணைப்பைக் கொண்டு செல்வோம்' என்ற வார்த்தைகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியாக அமைந்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.