2016-03-10 16:34:00

ஆண்டு தியானத்தில், திருஅவையின் சொத்துக்கள் பற்றிய சிந்தனை


மார்ச்,10,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், திருப்பீட அதிகாரிகளும் மேற்கொண்டு வரும் தவக்காலத் தியான முயற்சியில், திருஅவையின் சொத்துக்கள், பட்டினியை ஒழிப்பது, மற்றும் உணவை வீணாக்குவது போன்ற எண்ணங்கள், இப்புதனன்று இடம்பெற்றன.

மரியின் ஊழியர் சபையைச் சேர்ந்த அருள்பணி எர்மேஸ் ரோன்கி அவர்கள் வழங்கிய சிந்தனையில், "உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன?" (மாற்கு நற்செய்தி 6:38) என்று இயேசு எழுப்பிய கேள்வி மையமாக அமைந்தது.

அருள்பணியாளர்களும், திருஅவைத் தலைவர்களும் செல்வத்தின் மீது மிகுதியான ஆசை கொண்டிருப்பது, கிறிஸ்தவர்களை அதிகத் துயரத்தில் ஆழ்த்துகிறது என்றும், 'அப்பங்களை பகிர்தல்' என்பது அவர்களை மகிழ்வில் நிறைக்கிறது என்றும் அருள்பணி ரோன்கி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொரு உயிரும் இவ்வுலகில் பிறந்ததுமுதல் உணரும் ஒரு தேவை பசியே என்று கூறிய அருள்பணி ரோன்கி அவர்கள், பசியால் வாடும் பல மனிதர்கள், இறைவனை அப்பவடிவில் காண்பதையே விரும்புகின்றனர் என்றும் எடுத்துரைத்தார்.

"உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? போய்ப் பாருங்கள்" (மாற்கு 6: 38) என்று இயேசு கூறுவது, இன்று நம்மிடம் உள்ள செல்வங்களை நாம் கணக்கிடுவதற்கும், அதை ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படுத்தவும் அவர் தரும் அழைப்பு என்று அருள்பணி ரோன்கி அவர்கள் சுட்டிக் காட்டினார்.

'எனது' என்பது 'நமது' என்று மாறும்போது, குறைவான சேமிப்புக்களும் பயனுள்ளதாக மாறுகின்றன என்று கூறிய அருள்பணி ரோன்கி அவர்கள், இவ்வுலகில் உள்ள உணவு அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டால், யாரும் பசித்திருக்கத் தேவையில்லை என்பதை அழுத்திக் கூறினார்.

கத்தோலிக்கத் திருஅவை பிறந்த காலத்தில் இத்தகைய பகிர்வே கிறிஸ்தவர்களிடம் விளங்கியது என்ற எண்ணத்துடன் அருள்பணி ரோன்கி அவர்கள் தன் சிந்தனைகளை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.