2016-03-09 11:03:00

மனித வாழ்வு புனிதமானது என்று, திபெத்தியத் தாய்


மார்ச்,08,2016. திபெத்திய இளையோர் தங்கள் நாட்டிற்குப் பணியாற்றுவதற்கு பல வழிகள் இருக்கின்றன, இளையோர் படித்து, நாட்டிற்காக உழைக்க வேண்டும், உங்களையேத் தீயிட்டுக் கொளுத்திக் கொள்ளாதீர்கள், நீங்கள் உயிரோடு வாழ வேண்டும், மனித வாழ்வு புனிதமானது என்று, திபெத்தியத் தாய் ஒருவர் கூறியுள்ளார்.

திபெத்தில், சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டைச் சேர்ந்த டோர்ஜி செர்ரிங் என்ற 16 வயது இளைஞர் தீக்குளித்து இறந்துள்ளார். அந்த இளைஞரின் அடக்கச் சடங்கின்போது இவ்வாறு கேட்டுள்ள அவ்விளைஞரின் தாய், இளையோரே, உங்களையே தீயிட்டுக் கொளுத்திக் கொண்டது போதும் என்று கூறியுள்ளார்.

வீட்டுவேலைகளைக் கவனித்துக்கொண்டிருக்கும் ஒரு சாதாரண பெண் நான், எனக்கு உலகு பற்றி அதிகம் தெரியாது, ஆயினும் திபெத்திய இளையோர்க்கு இதை நான் சொல்ல வேண்டியது முக்கியம் என்று கூறியுள்ளார் அத்தாய்.

இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள அகதிகள் முகாமில் வாழ்ந்து வந்த 16 வயது மாணவன் டோர்ஜி செர்ரிங், சீனாவின் ஆதிக்கத்தைக் கண்டித்து, கடந்த பிப்ரவரி 29ம் தேதி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றான். தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த மாணவன், டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மூன்று நாட்களுக்குப் பின்னர் இறந்தான்.

திபெத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும் என, சிறு வயது முதல் தீர்க்கமாக இருந்தேன். அதனால்தான், திபெத்துக்காகத் தீக்குளித்தேன் என, அவன் தெரிவித்ததாக, அவனுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் கூறினார். 

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.