2016-03-09 16:06:00

பல்சமய உரையாடலை வலியுறுத்தும் இந்திய ஆயர் பேரவை


மார்ச்,09,2016. இந்திய ஆயர் பேரவையின் 32வது நிறையமர்வுக் கூட்டத்தில், பல்சமய உரையாடல் முக்கிய கருத்தாகப் பேசப்பட்டது என்று ஆயர் பேரவையின் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

மார்ச் 2, கடந்த புதன் கிழமை முதல் மார்ச் 9, இப்புதன் முடிய பெங்களூரு, தூய ஜான் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்திய ஆயர் பேரவையில், பல்சமய உரையாடலை வலியுறுத்தி, பல்சமய அறிஞர்கள் உரை வழங்கினர்.

சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக இந்தியாவில் தற்போது நிலவிவரும் பகைமை உணர்வுகளைக் களைவதற்கு, உரையாடலே சிறந்த வழி என்பது முக்கியக் கருத்தாக முன்வைக்கப்பட்டது.

மேலும், இந்திய ஆயர் பேரவையின் பொறுப்பாளர்கள் தேர்தலில், ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் கிளீமிஸ், உபதலைவர்கள் பேராயர் ஆன்ட்ரூஸ் தழத், மற்றும், பேராயர் பிலிப் நேரி பெராவோ ஆகியோரின் பணிக்காலம் மீண்டும் நீட்டிக்கப்பட்டது.

ஆயர் பேரவையின் செயலராகப் பணியாற்றிய பேராயர் ஆல்பர்ட் டிசூசா அவர்களுக்குப் பதிலாக, இராஞ்சி துணை ஆயர், தியடோர் மஸ்கரேனஸ் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதேவண்ணம், இந்திய ஆயர் பேரவையின் கண்காணிப்பில் இயங்கிவரும் புனித ஜான் மருத்துவமனையின் தலைவராகப்  பணியாற்றிய பேராயர் பிரான்சிஸ் கல்லரக்கல் அவர்களுக்குப் பதிலாக, சென்னை மயிலை பேராயர், ஜார்ஜ் அன்டனிசாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆதாரம் : CBCI / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.