2016-03-09 15:56:00

நற்செய்தி, நன்னெறி சட்டங்களைக் கூறும் நூல் அல்ல


மார்ச்,09,2016. நன்னெறி என்ற பெயரில், சட்ட திட்டங்களை வலியுறுத்துபவர் அல்ல, இயேசு, நற்செய்தியை, நன்னெறி சட்டங்களைக் கூறும் நூலாக நாம்தான் மாற்றிவிட்டோம் என்று, திருப்பீட அதிகாரிகளுக்கு தியானம் வழங்கும் அருள்பணி ஹெர்மேஸ் ரோன்கி (Hermes Ronchi) அவர்கள் கூறினார்.

உரோம் நகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள அரிச்சா விண்ணகப் போதகர் தியான இல்லத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் திருப்பீடத் தலைமையகத் துறைகளில் பணியாற்றும் தலைவர்களின் ஆண்டு தியானத்தை வழிநடத்தும் மரியின் ஊழியர் சபை அருள்பணியாளர் ரோன்கி அவர்கள், இவ்வாறு கூறினார்.

மார்ச் 8ம் தேதி சிறப்பிக்கப்பட்ட உலக மகளிர் நாளையொட்டி, நற்செய்தியில் கூறப்பட்டுள்ள மகளிர் குறித்து தன் சிந்தனைகளை வழங்கிய அருள்பணி ரோன்கி அவர்கள், பரிசேயரான சீமோன் இல்லத்தில் இயேசுவின் காலடிகளைக் கண்ணீரால் கழுவியப் பெண்ணை சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசினார்.

ஊரில் அவதூறான பெயரைப் பெற்றிருந்த பெண்ணுக்கு, சீமோனும், ஏனைய பரிசேயரும் தீர்ப்பு வழங்குவதிலேயே குறியாய் இருந்தனர் என்று சுட்டிக்காட்டிய அருள்பணி ரோன்கி அவர்கள், தீர்ப்பிடாதவண்ணம் மற்றவர்களைக் காண்பது எவ்விதம் என்பதை இயேசு தன் வாழ்நாள் முழுவதும் சொல்லித் தந்தார் என்றும் குறிப்பிட்டார்.

சீமோன் இல்லத்தில் நிகழ்ந்த விருந்து முக்கியத்துவம் பெறாமல், அங்கு வந்த பெண் முக்கியத்துவம் பெற்றார் என்றும், ஓரங்களை மையங்களுக்குக் கொணர்வது இயேசுவுக்குத் தெரிந்த மற்றும் அவர் விரும்பிய வழி என்றும் சுட்டிக்காட்டினார், அருள்பணி ரோன்கி.

தன் பாதங்களை அந்தப் பெண் கழுவியது இயேசுவின் உள்ளத்தில் ஆழப்பதிந்ததால், அவரும், இறுதி இரவுணவு வேளையில், தன் சீடர்களின் பாதங்களைக் கழுவினார் என்று நாம் சிந்தித்துப் பார்க்கலாம் என்று அருள்பணி ரோன்கி அவர்கள் எடுத்துரைத்தார்.

இச்செவ்வாய் மாலையில் அருள்பணி ரோன்கி அவர்கள் வழங்கியச் சிந்தனைகளின் இறுதியில், ஒப்புரவு அருளடையாளம் வழங்கும் அருள்பணியாளர்களுக்கு ஒரு சிறப்பு வேண்டுகோளை முன்வைத்தார்.

ஒப்புரவு அருளடையாளத்தை நாடி வருவோரை, சட்டங்கள் என்ற அளவுகோல் கொண்டு வகைப்படுத்துவதை விட்டுவிட்டு,  ஒவ்வொருவரும், அவரவருக்கே உரிய  பிரச்சனைகளுடன் வரும் தனிப்பட்ட மனிதர்கள் என்று காணும் பக்குவம் பெறவேண்டும் என்ற விண்ணப்பத்தை அருள்பணி ரோன்கி அவர்கள் விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.