2016-03-09 15:33:00

திருத்தந்தை : இரக்கத்தின் கதவு இவ்வாறு திறக்கிறது


மார்ச்,09,2016. "அன்பு, கனிவு, பராமரிப்பு இவற்றால் உருவாகும் சிறு செயல்கள் வழியே நம்முடன் இறைவன் இருக்கிறார் என்பதை மக்கள் உணர்கின்றனர். இரக்கத்தின் கதவு இவ்வாறு திறக்கிறது" என்ற டுவிட்டர் செய்தியையும், "என் வாழ்வு, என் மனநிலை, நான் வாழ்வை நடத்தும் வழி ஆகியவை, இறைவன் நமக்கு அருகில் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தும் அடையாளங்களாக இருக்கவேண்டும்" என்ற டுவிட்டர் செய்தியையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 7,8 ஆகிய இரு நாட்கள் வெளியிட்டார்.

@pontifex என்ற முகவரியுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், இஸ்பானியம், போர்த்துகீஸ், போலிஷ் மற்றும் அரேபியம் ஆகிய எட்டு மொழிகளில் வெளியாகி வருகின்றன.

திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள இறுதித் தகவல்கள்படி, இதுவரை இப்பக்கத்தில் 740 டுவிட்டர் செய்திகள் வெளியாகியுள்ளன என்று தெரிகிறது.

மற்றும், அண்மைய நிலவரப்படி, திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தைத் தொடரும் மக்களின் எண்ணிக்கை, 83,80,000 என்று பதிவாகியுள்ளது.

தங்கள் சிந்தனைகள் வழியே உலக மக்களின் மத்தியில் தாக்கங்களை உருவாக்கிவரும் தலைவர்கள் பட்டியலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 4வது இடத்தை வகிக்கிறார் என்று, Forbes நிறுவனம் வெளியிட்டு வரும் தரவரிசையில் தெரிய வந்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.