2016-03-09 10:04:00

திருஅவை தனது பணியில் கிறிஸ்துவைச் சுடர்விடச் செய்கின்றது


மார்ச்,08,2016. திருஅவை தனது மறைப்பணியில், தனது முகத்தை அல்ல, ஆனால், கிறிஸ்துவின் முகத்தை எப்போதும் சுடர்விடச் செய்கின்றது என்று, அருள்பணி Ermes Ronchi அவர்கள் கூறினார்.

உரோம் நகரின் தென்கிழக்குப் புறநகர்ப் பகுதியிலுள்ள அரிச்சா விண்ணகப் போதகர் தியான இல்லத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் திருப்பீடத் தலைமையகத் துறைகளில் பணியாற்றும் தலைவர்களுக்குத் தியானம் கொடுத்துவரும், மரியின் ஊழியர் சபையின் அருள்பணி Ermes Ronchi அவர்கள், இவ்வாறு கூறினார்.

கிறிஸ்து இறைமகன் என்ற திருத்தூதர் பேதுருவின் விசுவாச அறிக்கை பற்றிச் சொல்லும் நற்செய்திப் பகுதியை மையமாக வைத்து, இச்செவ்வாய் காலையில் நான்காவது தியான உரையை வழங்கினார் அருள்பணி Ronchi.

தாம் யார் என்று திருத்தூதர்களிடம் இயேசு கேட்டபோது பேதுருவின் இந்த விசுவாச அறிக்கை வெளிப்பட்டது, இக்கேள்விக்கு முன்னர், மக்கள் தம்மை யார் என்று சொல்கிறார்கள் என்றும் இயேசு கேட்டார், மற்றவர்கள் தம்மைப் பற்றி என்ன சொல்கிறார்கள்  என்பதைவிட, தம் திருத்தூதர்கள் தங்களின் சொந்த இதயங்களில் சென்று தம்மைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்று இயேசு விரும்புகிறார் என்றும் கூறினார் அருள்பணி Ronchi.

திருத்தூதர்கள், தங்கள் இதயங்களில் வாழும் இறைவனுக்கு இதயங்களைத் திறந்துள்ளார்களா? என்பதை அறிவதற்கு இயேசு விரும்பினார் என்றும் கூறினார் அருள்பணி Ronchi. 

இயேசுவைப் பின்செல்லுதல் என்பது, சிலுவையில் அறையப்பட்ட ஒரு மனிதரைப் பின்தொடர்வதாகும், அவர், பிறரின் குருதியை அல்ல, தமது குருதியைச் சிந்தினார், கடவுளுக்கும், மனித சமுதாயத்திற்கும் இடையே இடைநிலையாளர்களாக இருப்பதே திருஅவையின் பணி, திருமுழுக்கு யோவான் போன்று, இயேசுவின் பாதையைத் தயார்படுத்த வேண்டும், கிறிஸ்துவின் முகத்தை ஒளிர்விக்கும் திருஅவையின் அழகை நினைத்துப் பார்ப்போம் என்று கூறினார் அருள்பணி Ronchi.

மார்ச்,07, கடந்த ஞாயிறு மாலையில் தொடங்கிய இத்தியானம், மார்ச் 11, வருகிற வெள்ளியன்று நிறைவடையும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.