2016-03-09 16:09:00

சிறார் திருமண கொடுமையைத் தடுக்கும் இந்திய சலேசிய சபை


மார்ச்,09,2016. சலேசிய சபையைச் சார்ந்த துறவிகள், ஒவ்வோர் ஆண்டும், இந்தியாவில் நூற்றுக்கணக்கான சிறுமியரை, சிறார் தொழில், மற்றும் சிறார் திருமணம் என்ற கொடுமைகளிலிருந்து காப்பதாக இந்திய சலேசிய அருள்பணியாளர் ஜார்ஜ் மேனம்பரம்பில் அவர்கள் கூறினார்.

'நம்பிக்கையின் குரல்கள்' என்ற தலைப்பில் வத்திக்கானில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொண்ட அருள்பணி மேனம்பரம்பில் அவர்கள் ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.

Fidel Gotz அறக்கட்டளையும், இயேசு சபையினரின் புலம்பெயர்ந்தோர் அமைப்பும் இணைந்து நடத்திய இக்கருத்தரங்கில் கலந்துகொண்ட அருள்பணி மேனம்பரம்பில் அவர்கள், இந்தியாவில் பெண் குழந்தைகளின் கல்வி அவர்களுக்கு நம்பிக்கை தரும் ஒரு முக்கிய வழி என்று கூறினார்.

வளர் இளம்பருவ, மற்றும் சிறார் திருமணம் சட்டத்தால் தடை செய்யப்பட்டிருந்த போதிலும், இந்தியாவில் 1,50,00,000 பெண்கள் இன்னும் இத்தகையக் கொடுமைகளுக்கு உள்ளாகின்றனர் என்று அருள்பணி மேனம்பரம்பில் அவர்கள் தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.

பல்வேறு மாநிலங்களில் பணியாற்றும் சலேசிய துறவு சபையினர், Navajeevan Bala Bhavan மற்றும் Ashalayam போன்ற இல்லங்கள் வழியே, பிரச்சனைகளில் சிக்கியுள்ள பெண்களை காப்பாற்றி வருகின்றனர் என்பதை, அருள்பணி மேனம்பரம்பில் அவர்கள் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிக் கூறினார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.