2016-03-09 15:47:00

உலக மகளிர் நாள் கருத்தரங்கிற்கு கர்தினால் டர்க்சன் செய்தி


மார்ச்,09,2016. தனி மனிதர்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்கள் என்ற நிலையைத் தாண்டி, மக்களின் மிக அவசரமான, அடிப்படையான தேவைகளை நிறைவேற்றும் முன்னேற்றங்கள் குறித்து இவ்வுலகம் சிந்திக்க வேண்டியுள்ளது என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

மார்ச் 8, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட உலக மகளிர் நாளையொட்டி, உரோம் நகரில் நடைபெற்ற பன்னாட்டுப் பெண்கள் கருத்தரங்கிற்கு, திருப்பீட நீதி அமைதி அவைத் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் அனுப்பியச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

'நீடித்திருக்கக்கூடிய முன்னேற்ற இலக்குகளில், நலவாழ்வும், பாலியலும் - திருஅவையின் படிப்பினைகள்' என்ற தலைப்பில் உரோம் நகரில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு கர்தினால் டர்க்சன் அவர்கள் அனுப்பிய இச்செய்தி, கருத்தரங்கின் ஆரம்ப அமர்வில் வாசிக்கப்பட்டது.

'இன்றைய உலகின் பிரச்சனைகள் சிக்கல்கள் பல நிறைந்தன என்பதால், அவற்றிற்கு பல வழிகளிலும் தீர்வுகள் தேடவேண்டியக் கடமை நமக்கு உள்ளது' என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'இறைவா உமக்குப் புகழ்' என்ற திருமடலில் கூறியுள்ளதை, கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

WYA எனப்படும் உலக இளையோர் கூட்டணி, இரு வேறு பெண்கள் அமைப்புக்களுடன் இணைந்து நடத்தும் இக்கருத்தரங்கிற்கு, திருப்பீட நீதி அமைதி அவை முழு ஆதரவு அளித்துள்ளது.

உலக இளையோர் கூட்டணி ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டி, இவ்வமைப்பினர் சென்ற ஆண்டு மேற்கொண்ட முயற்சிகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிதி உதவி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.