2016-03-09 11:13:00

உலக அளவில் தொழில் சந்தையில் பாலின சமத்துவமின்மை


மார்ச்,08,2016. உலகின் சில பகுதிகளில் பணித்தளங்களில் பெண்களின் வாழ்வில் முன்னேற்றம் காணப்பட்டாலும், இன்னும், உலகில் இலட்சக்கணக்கான பெண்கள் தங்களின் பணியிடங்களில் சமத்துவத்திற்காக ஏங்குகின்றனர் என்று, ILO எனும் உலக தொழில் நிறுவனம் கூறியுள்ளது. 

2016ம் ஆண்டின் நிலவரம் குறித்து, 178 நாடுகளில் எடுத்த ஆய்வின் முடிவை, உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட ILO நிறுவனம், தரமான வேலைகளைக் கண்டுபிடிப்பதற்கும், அதில் நிலைத்து நிற்பதற்கும் எண்ணற்ற சவால்களைப் பெண்கள் எதிர்கொள்கின்றனர் என்று கூறியுள்ளது.

உலக அளவில், தொழில் சந்தையில், பெருமளவில் நிலவும் பாலின சமத்துவமின்மையைக் களைவதற்கு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், 2030ம் ஆண்டின் புதிய வளர்ச்சித்திட்ட இலக்கை எட்டுவதற்கு இது நல்ல வாய்ப்பாக உள்ளது என்று ILO நிறுவனம் வலியுறுத்துகிறது.

2015ம் ஆண்டில், 58 கோடியே 60 இலட்சம் பெண்கள், தாங்களாகவே ஏதாவது ஒரு வேலை செய்து குடும்பங்களைப் பராமரித்து வந்தனர் என்று ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.  

மேலும், இச்செவ்வாயன்று(மார்ச் 8) உலகெங்கும் சிறப்பிக்கப்பட்ட உலக மகளிர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள, இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள், பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது, சமூகத்தின் தலையாய கடமை எனக் கூறியுள்ளார். பெண்களுக்கு சம உரிமையையும், கண்ணியமான வாழ்க்கையையும் அளிக்க வேண்டும். அவர்களது உரிமை மதிக்கப்பட வேண்டும். இதுவே நமது முதன்மையான பொறுப்பு. அப்போதுதான் பெண்கள் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி, நாட்டின் வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பைச் சிறந்த முறையில் அளிக்க முடியும் என்று, மேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.