2016-03-09 14:40:00

இது இரக்கத்தின் காலம்... – அதிக தேர்ச்சி பெற்றது யார்?


ஒரு ஜென் ஆசிரமத்தில் பல மாணவர்கள் தங்கிப் பயின்றுவந்தார்கள்.

தினமும் காலை 11 மணிக்குத் தியான வகுப்பு. ஏறக்குறைய ஐம்பது மாணவர்கள் ஒரு பெரிய மண்டபத்தில் அமர்ந்து ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் தியானம் செய்வார்கள்.

இந்த வகுப்பின்போது சில மாணவர்கள் தூங்கிவிடுவது உண்டு. இதனால் எரிச்சலடைந்த குருநாதர், தன்னுடைய தோட்டக்காரரை அழைத்தார். அவர் கையில் ஒரு சின்னக் குச்சியைக் கொடுத்து, ‘தம்பி, உன்னுடைய வேலை, இந்த மாணவர்களைக் கவனிப்பது. யாராவது தூங்கி வழிவதுபோல் தெரிந்தால், அவர்களுடைய முதுகில் இந்தக் குச்சியால் ஒருமுறை தட்டு. விழித்துக்கொள்வார்கள், தியானத்தைத் தொடர்வார்கள். புரிந்ததா?’ என்றார்.

‘புரிஞ்சதுங்கய்யா!’ என்றார் அந்த தோட்டக்காரர். அதன்படி தினந்தோறும் மாணவர்களைக் கூர்ந்து கவனித்து, தூங்குபவர்களை உடனுக்குடன் எழுப்பிவிட்டுக்கொண்டிருந்தார் அவர்.

ஆண்டின் இறுதியில், அந்த ஐம்பது மாணவர்களின் படிப்பு முடிவடைந்தது. எல்லாரையும் வழியனுப்பும் நேரம். அப்போது ஒரு மாணவர் கேட்டார், ‘குருவே, எங்கள் வகுப்பில் தியானத்தில் அதிகக் கவனமும் தேர்ச்சியும் பெற்றது யார்?’ என்று.

குருநாதர் அரை விநாடியும் யோசிக்காமல் பதில் சொன்னார், ‘சந்தேகமென்ன? அந்தத் தோட்டக்காரர்தான்!’ 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.