2016-03-09 14:56:00

அமைதி ஆர்வலர்கள் : 2009ல் நொபெல் அமைதி விருது


மார்ச்,09,2016. அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் பாரக் ஒபாமா அவர்களுக்கு 2009ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. இவ்விருதைப் பெற்ற அந்நாட்டின் நான்காவது அரசுத்தலைவர் ஒபாமா. இவருக்கு முன்னர், தியோடோர் ரூஸ்வெல்ட்(1906), வுட்ரூ வில்சன்(1919), ஜிம்மி கார்ட்டர்(2002) ஆகிய மூவரும் இவ்விருதைப் பெற்றுள்ளனர். ஜிம்மி கார்ட்டர் அவர்கள், அரசுத்தலைவர் பதவியை முடித்த 21 ஆண்டுகளுக்குப் பின்னர், இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது. ஒபாமா அவர்கள், அரசுத்தலைவராகப் பதவியேற்ற எட்டரை மாதங்களில் இவ்விருதைப் பெற்றார். இவ்விருது அறிவிப்பு, ஒபாமா அவர்களுக்கே வியப்பைத் தந்தது மற்றும், இதை மிகவும் தாழ்மையோடு பெறுவதாக அவர் தெரிவித்தார் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன. அதேநேரம், இவ்விருது இவருக்கு அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்புகளும் ஒலித்தன. 2009ம் ஆண்டில் நொபெல் அமைதி விருதுக்கென, நார்வே நொபெல் விருதுக் குழுவிடம், சீன மற்றும் ஆப்கான் குடியுரிமை ஆர்வலர்கள், ஆப்ரிக்க அரசியல்வாதிகள் உட்பட 205 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. நார்வே நாட்டுத் தொழிற்கட்சியிலிருந்து இருவர், சோஷலிச இடதுசாரி கட்சியிலிருந்து ஒருவர், பழமைவாதக் கட்சியிலிருந்து ஒருவர், வலதுசாரி முற்போக்குக் கட்சியிலிருந்து ஒருவர் என, நார்வே நாடாளுமன்றம் ஐந்து பேரை இக்குழுவுக்கு நியமித்தது. இக்குழுவும், 2009ம் ஆண்டில் ஆறு அல்லது ஏழுமுறைகள் கூடி விவாதித்தது. இறுதியில், முற்போக்குக் கட்சிப் பிரதிநிதி Jagland அவர்களின் உறுதியான முயற்சியால் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது Jagland அவர்கள், வருங்காலத்தில் எதுவும் நடக்கலாம் என்பதற்காக இவ்விருதை வழங்கவில்லை, ஆனால், ஒபாமா அவர்கள், கடந்த காலத்தில் ஆற்றிய செயல்களுக்காக இதை வழங்குகிறோம். ஒபாமா அவர்கள் ஆற்ற முயற்சிக்கும் நடவடிக்கைகளுக்கு இவ்விருது சிறிதளவு உதவும் என்றும் நாங்கள் நம்புகின்றோம் என்று கூறினார். மேலும், ஒபாமா அவர்களின் வெளிநாட்டுக் கொள்கையைச் செயல்படுத்த இவ்விருது ஊக்கமூட்டுவதாய் அமையும் என்றும், 2009ம் ஆண்டு ஜூனில் கெய்ரோவில் இஸ்லாம் பற்றி, ஒபாமா அவர்கள் ஆற்றிய உரையால் ஈர்க்கப்பட்டு இவ்விருதை இக்குழு வழங்கியதாகவும் கூறப்படுகிறது. ஆயினும், இவ்விருதுக் குழு, ஒபாமா அவர்களிடம் எதிர்பார்த்ததை, அவர் நிறைவேற்றத் தவறிவிட்டார் எனவும், ஒபாமா அவர்களின் பல ஆதரவாளர்கள்கூட இவ்விருது தவறான நபருக்கு வழங்கப்படுகிறது என்றே அச்சமயத்தில் கூறியதாகவும், நார்வே நொபெல் விருதுக் குழுவின் செயலர் பதவியிலிருந்து 2014ம் ஆண்டில் விலகிய Geir Lundestad அவர்கள் கடந்த ஆண்டு செப்டம்பரில் கூறியிருக்கிறார்.

ஆயினும், பன்னாட்டு அரசியல் செயலாட்சித் திறன் மற்றும் மக்களுக்கிடையே ஒத்துழைப்பை உறுதிப்படுத்த ஒபாமா அவர்கள் எடுத்துவரும் சிறப்பான முயற்சிகளுக்காக, அவருக்கு நொபெல் அமைதி விருது வழங்கப்படுவதாக, 2009ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி இவ்விருதுக் குழு அறிவித்தது. அணுஆயுதங்கள் பரவாமல் இருப்பதை ஊக்குவிக்கவும், பன்னாட்டு அளவில், குறிப்பாக, முஸ்லிம் உலகத்தோடு  உறவுகளை வளர்க்கவும் ஒபாமா அவர்கள் எடுத்துவரும் முயற்சிகளை, இவ்விருதுக் குழு குறிப்பிட்டது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் 44வது அரசுத்தலைவராகிய பாரக் ஹூசேன் ஒபாமா அவர்கள்(Barack Hussein Obama II), இந்தப் பதவியை வகிக்கும் முதல் ஆப்ரிக்க அமெரிக்கர் மற்றும் ஹவாய்த் தீவில் பிறந்து இந்தப் பதவியை வகிக்கும் முதல் நபருமாவார். செனட் அவையின் உறுப்பினரான ஐந்தாவது ஆப்ரிக்க-அமெரிக்க இனத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

இவர் 1961ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி ஹவாய்த் தீவின் ஹோனோலூலூவில் பிறந்தார். இவரது தாய் Stanley Ann Dunham, ஆங்கிலேய வழிமரபையும், தந்தை பார்க் ஒபாமா சீனியர் அவர்கள், கென்ய நாட்டையும் சேர்ந்தவர்கள். ஒபாமாவின் பெற்றோர் ஹவாய்ப் பல்கலைக்கழகத்தில் இரஷ்ய மொழி படிக்கும்போது சந்தித்து, 1961ம் ஆண்டில் திருமணம் செய்து, 1964ம் ஆண்டில் பிரிந்து விட்டனர். ஒபாமாவின் தந்தை கென்யா திரும்பி விட்டார். ஒபாமாவை வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் படிக்க வைப்பதற்காக அவரது தாய், Seattleக்குத் திரும்பி விட்டார். கொலம்பியா பல்கலைக்கழகத்திலும், ஹார்வர்ட் சட்டப் பள்ளியிலும் பட்டயக் கல்வியை முடித்த ஒபாமா அவர்கள், ஹார்வர்ட் சட்ட மதிப்பீடு என்ற புகழ்பெற்ற சட்டம் தொடர்பான இதழின் பதிப்பாசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளுகுகப் பின்னர், இவ்விதழின் முதல் கருப்பினத் தலைவராக உறுதி செய்யப்பட்டார். இவர் தனது சட்டக் கல்வியைப் படித்துக்கொண்டிருந்தபோதே, சிகாகோவில் சமுதாய ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார். 1992ம் ஆண்டில் மிஷேல் என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 1992ம் ஆண்டு முதல், 2004ம் ஆண்டு வரை, சிகாகோ பல்கலைக்கழகச் சட்டக் கல்லூரியில் அரசமைப்புச் சட்டக் கல்வி பேராசியராகவும், அதேசமயம் குடியுரிமை வழக்கறிஞராகவும் பணியாற்றினார். 1997ம் ஆண்டு முதல், 2004ம் ஆண்டுவரை Illinois செனட் அவைப் பிரதிநிதியாகவும் பணியாற்றினார். அச்சமயத்தில், இவரது கட்சி மேலவையில் சிறுபான்மையாக இருந்தாலும், மத்திய அரசின் ஆயுதக் கட்டுப்பாட்டை உறுதியாக்கச் சட்டத்தைப் பரிந்துரைத்தார்.

ஒபாமா அவர்கள், 2004ம் ஆண்டில், அமெரிக்க ஐக்கிய நாட்டு செனட் அவைக்கு, சனநாயக கட்சியில், Illinois பிரதிநிதியாக வெற்றிபெற்றபோது தேசிய அளவில் இவர்மீது கவனம் திரும்பியது. 2006ம் ஆண்டில் சனநாயகக் கட்சி பெரும்பான்மை பெற்றதற்கு பிறகு, தேர்தல் ஊழல், காலநிலை மாற்றம், அணுசக்தி பரவல், முன்னாள் படையினர்க்கு நல்வாழ்வு போன்ற பிரச்சனைகள் தொடர்புடைய சட்டங்களை எழுதினார். பின்னர், 2007ம் ஆண்டில் அரசுத்தலைவர் வேட்பாளர் பிரச்சாரத்தைத் தொடங்கினார். தேர்தல் அறிக்கையில், ஈராக் போரை முடிவுக்குக் கொணர்தல், வெளி அமைப்புகளால் அரசியல்வாதிகள் மீதிருந்த தாக்கத்தைக் குறைத்தல், அனைவருக்கும் நலவாழ்வு திட்டம் என்பதே தனது முக்கிய நோக்கங்கள் என்று கூறினார். குடியரசு கட்சி வேட்பாளர் John McCain அவர்களைத் தோற்கடித்து 2009ம் ஆண்டு சனவரி 20ம் தேதி அரசுத்தலைவராகப் பணியேற்றார். அதே ஆண்டில் நொபெல் அமைதி விருதையும் பெற்றார் பராக் ஒபாமா. 2012ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி நடந்த அரசுத்தலைவர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பாக நின்ற மிட் ராம்னியை தோற்கடித்து மீண்டும் அரசுத்தலைவரானார் பராக் ஒபாமா. "ஓரினச் சேர்க்கை வாழ்க்கை முறையையும், திருமணத்தையும், சமூக மற்றும் சட்ட முறைப்படி அங்கீகரிக்க வேண்டும். அவர்களுடைய உரிமைகள் காக்கப்படவேண்டும். அவர்களும் மனிதர்களே!’" என்று சொல்லியிருப்பவர் அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா

அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும், கியூபாவுக்கும் இடையேயான உறவுகள், பனிப்போர் காலத்தில் 1961ம் ஆண்டில் முறிந்தன. கியூபா மீது பொருளாதாரத் தடையும் விதிக்கப்பட்டது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முயற்சியால் இவ்விரு நாடுகளுக்கும் இடையே தற்போது அரசியல் உறவு மீண்டும் ஏற்பட்டு, இவ்விரு நாடுகளில் தூதரகங்களும் திறக்கப்பட்டுள்ளன. இன்னும் இரு வாரங்களில் ஒபாமா அவர்கள், கியூபாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். மேலும், கியூபாவின் கடல் பகுதியிலுள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டின் இராணுவச் சிறையான குவாண்டனாமோ வளைகுடா தடுப்பு முகாம் (Guantanamo Bay detention camp), ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்க் கைதிகளை வைப்பதற்காக, 2002ம் ஆண்டு சனவரியில், அப்போதைய அமெரிக்க அரசுத்தலைவர் ஜார்ஜ் புஷ் நிர்வாகத்தால் அமைக்கப்பட்டது. இங்கு அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களுக்கு எதிரான பல்வேறு நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. 2016ம் ஆண்டு சனவரி நிலவரப்படி, 93 கைதிகள் இங்கு உள்ளனர். இந்தச் சிறையை மூடுவதற்கு ஒபாமா அவர்கள் முயற்சித்து வருகிறார். ஓராண்டுக்குள் இத்தடுப்பு முகாமை மூடுவேன் என்று, இவர், 2009ம் ஆண்டு சனவரி 22ம் தேதி வாக்குறுதி வழங்கியிருந்தார். ஆனால் இவரின் பதவிக்காலம் 2017ம் ஆண்டு சனவரி 20ம் தேதி வெள்ளிக்கிழமையோடு நிறைவடையும். அதற்குள் இவரது இம்முயற்சி வெற்றி பெறுமா? பொறுத்திருந்து பார்ப்போம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.