2016-03-07 15:37:00

வாரம் ஓர் அலசல் – ஆயிரம் அலுவலிலும் அலுக்காத உள்ளம்


மார்ச்,07,2016. இந்தியர்களால் நேதாஜி (தலைவர்) என்று அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், பெர்லின் நகரில் இருந்த சமயம் அது. அவர் விமான விபத்தில் இறந்துவிட்டதாக, ராய்ட்டர் செய்தி நிறுவனம் ஒரு பொய்ச் செய்தியைப் பரப்பியது. அதனைப் படித்த அவர் கண்கலங்கி அழுதாராம். அஞ்சா நெஞ்சராய், அந்நியரை மிரட்டிய நேதாஜி அவர்கள், கண் கலங்கியதைப் பார்த்து அவர் அருகிலிருந்தவர்கள், நேதாஜியா.. இப்படி? என்று கேட்டதற்கு அவர், நான் மரணத்தைக் கண்டோ, மரணச் செய்தியைக் கண்டோ பயப்படவில்லை, ஆனால், என் வயது முதிர்ந்த தாய் இந்தச் செய்தியைக் கேட்டுக் கலங்கிப் போவார்கள். அவர்களுக்கு நான் உயிரோடு உள்ள செய்தியைச் சொல்ல முடியவில்லையே என்றுதான் அழுகிறேன் என்று சொன்னாராம். அன்பர்களே, இவ்வுலகில் நாம் வாழ்வதற்கு வழிகாட்டுபவர்கள் நம் தாயும் தந்தையும். எவ்வளவு பெரிய நெஞ்சுறுதி கொண்ட வீரராக இருந்தாலும், தாய்மை என்பதை மென்மையாகவே அவரால் உணர முடிகிறது. தாயினும் சிறந்த கோயிலும் இல்லை என்று ஔவை பாட்டிச் சொல்லயிருப்பது போன்று, இவ்வுலகில் தாயன்புக்கு நிகரான அன்பு வேறு எதுவும் கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆம். ஈன்றபொழுதில் அன்னையாய், இனிதாய் வளர்த்த பொழுதில் தாதியாய், கல்லூரி வயதில் தோழியாய், மணவாழ்வில் மகிழ்ச்சி அளிப்பவராய், பணிவுலகில்  சகோதரிகளாய், அன்பைப் பொழியும் மகள்களாய், எங்கெங்கு காணினும் சக்திகளாய், நம் உறவின் அனைத்துப் பரிமாணங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள். தாய் மண்ணே வணக்கம் என்றுதான், பிறந்த நாட்டை வாழ்த்துகிறோம். நம்மைச் சுமக்கும் பூமித்தாயும் பெண்தான். நதிகள், மலைகள் என்று, முக்கியமானவை அனைத்துக்கும் பெண்கள் பெயர்கள்தான். பெண்மைக்கு இவ்வளவு முக்கியத்துவம் உண்டு. தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாது, அவற்றைச் சவாலுடன் எதிர்கொண்டு வாழ்வில் வெற்றிக் கண்ட பல பெண்கள், நம் மத்தியில், ஏன், நம் ஒவ்வொருவர் குடும்பங்களிலும் வாழ்கின்றனர். எனவே, நம் குடும்பத்தில் உள்ளவர்கள், நம் உறவினர்கள், நமக்குத் தெரிந்தவர்கள் என்றில்லாமல், அனைத்து மகளிரையும் மனதார வாழ்த்துவோம். ஏனெனில் மார்ச் 08, இச்செவ்வாய் உலக மகளிர் தினம். வத்திக்கான் வானொலி அன்பு நெஞ்சங்களே, நீங்கள் உங்கள் குடும்பங்களில் இத்தினத்தை எப்படிச் சிறப்பிக்க உள்ளீர்கள்? அறிவதற்குக் கொஞ்சம் ஆவலாய் இருக்கிறோம். 

இவ்வுலக நாளை முன்னிட்டு, ஆப்ரிக்காவின் டான்சானியா நாட்டில், ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே நட்புமுறையில் ஹாக்கி விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டுள்ளது. புதுடெல்லியில், தேசிய மகளிர் மாநாடு தொடங்கப்பட்டு, பேரணி மற்றும் சைக்கிள் பேரணியும் இடம்பெற்றுள்ளது. பாலஸ்தீனாவில் இசை மற்றும் நடன விழாவும், அல்பேனியாவில் ஊர்வலங்கள், கால்பந்து போட்டி, ஓவியக் கண்காட்சி ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றன. இப்படி நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இத்தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இந்த ஆண்டு உலக மகளிர் தினம், “இப்புவியில் 2030க்குள் ஐம்பது-ஐம்பது:பாலின சமத்துவத்திற்காக நடவடிக்கை”என்ற தலைப்பில் இச்செவ்வாயன்று உலகெங்கும் சிறப்பிக்கப்படுகின்றது. சமத்துவத்திற்கு உறுதி என்ற வேண்டுகோளுடன் சிறப்பிக்கப்படும் இந்த உலக தினத்திற்கென, ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், ஐ.நா. வரலாற்றில், முதன் முறையாக, ஐ..நா. அமைதி காக்கும் படைக்குத் தலைவராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ஐ.நா. அமைதிப் பணித்தளங்களில் 25 விழுக்காட்டு இடங்களுக்குப் பெண்கள் தலைவர்களாக இருக்கிறார்கள். கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஐ.நா. அலுவலகங்களில், உதவிச் செயலராக அல்லது நேரடிப் பொதுச் செயலராக, 150 பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் பாலின சமத்துவத்தைக் கொண்டு வருவதற்கு அரசியல் முறைப்படி ஆர்வம் அதிகம் தேவை என்று சொல்லியுள்ளார். அன்பு நேயர்களே, இன்று உலக அளவில், அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சாரத்தில் பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆப்ரிக்க நாடான கென்யாவின் வட பகுதியில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக, ஆண்களின் துணையின்றி, பெண்கள் மட்டுமே வாழ்ந்து வரும் கிராமம் உலகினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தலைநகர் நைரோபியிலிருந்து 380 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உமோஜா கிராமத்தில், கடந்த 1990ம் ஆண்டு 15 பெண்கள் கூட்டாக இணைந்து வாழத்தொடங்கினர். இவர்கள் அனைவரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், குழந்தைத் திருமணம், கணவரால் கைவிடப்பட்ட மற்றும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள். அணிகலன்கள் செய்து விற்பது மற்றும் கூடாரங்களாலான ஒரு சிறிய சுற்றுலாத்தலத்தை ஏற்படுத்தியுள்ளதன் வழியாக  இப்பெண்கள் வருமானம் ஈட்டி வருகின்றனர். அருகிலுள்ள  கிராமத்து ஆண்கள் சிலர் அவ்வப்போது இப்பெண்களிடம் தவறாக நடக்க முயற்சிப்பதுண்டாம். அதற்கெல்லாம் அஞ்சாமல், அனைத்துத் தடைகளையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு, இக்கிராமத்தில் 200க்கு மேற்பட்ட பெண்கள் பத்து குடும்பங்களாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழகத்தின் சேலத்தைச் சேர்ந்த உமா மகேஸ்வரி, சுவாதிகா என்ற இரு சகோதரிகள், ஜிம்னாஸ்டிக் விளையாட்டுத் துறையில், பல தடைகளைத் தாண்டி வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்கள். “வானவில் பெண்கள்:வில்லாக வளையும் சாதனைச் சகோதரிகள்”என்று தி இந்து நாளிதழ் இச்சகோதரிகள் பற்றி செய்தி வெளியிட்டிருந்தது. இந்த விளையாட்டுக்கு ஆதாரமான உடல் வலிமையைத் தரும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுக்குக்கூட வழியில்லாத குடும்பத்தைச் சேர்ந்த இச்சகோதரிகளுக்கு இந்தச் சாதனை எப்படி சாத்தியமானது?

இச்சகோதரிகளின் தந்தை சிவக்குமார் அவர்கள், காய்கறி வியாபாரி. இச்சகோதரிகள் ஒருசமயம், விளையாடுவதற்காகத் தங்கள் அப்பாவுடன் சேலம் காந்தி விளையாட்டு மைதானத்துக்குச் சென்றபோது அங்கு நடந்த ஜிம்னாஸ்டிக் பயிற்சியை பார்த்தனர். பார்த்ததுமே அவர்களுக்கு ஜிம்னாஸ்டிக்கைப் பிடித்துவிட்டது. இவர்களின் அசாத்தியத் திறமையையும், ஆர்வத்தையும் அறிந்த ஜிம்னாஸ்டிக் பயிற்றுநர் ஜெயமோகன் அவர்கள், சகோதரிகளின் தந்தையிடம் பேசி இருவரையும் இந்த விளையாட்டில் முழு அளவில் ஈடுபடுத்தினார். 12 வயதில் பயிற்சியில் ஈடுபட்ட உமா மகேஸ்வரி, மாவட்ட மற்றும் மாநில அளவில் தலா 18 பதக்கங்களைப் பெற்றிருக்கிறார். இதேபோல் ஆறு வயதில் பயிற்சியில் ஈடுபட்ட சுவாதிகா, மாவட்ட அளவில் 18 பதக்கங்களையும், மாநில அளவில் 16 பதக்கங்களையும் பெற்றுச் சாதனை படைத்திருக்கிறார். இந்தச் சகோதரிகள் படிப்பிலும் திறமைசாலிகளாம். இந்த மார்ச் மாதம் நடக்கும் அனைத்துலகப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவதுதான் அடுத்த இலக்கு”என்று உற்சாகத்தோடு சொல்லியிருக்கிறார் உமா மகேஸ்வரி. இந்த உலக மகளிர் தினத்தில் இச்சகோதரிகளின் இலக்கு வெற்றியடைய மனதார வாழ்த்துகிறோம்.

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடக்காவு பகுதியில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி மையக் கட்டடத்தை முதல்வர் உம்மன் சாண்டி அவர்கள், அண்மையில் திறந்து வைத்தார். விழா மேடைக்கு முதல்வர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, வழியில் நின்றிருந்த 2ம் வகுப்பு மாணவி ஷிவானி, உரத்த குரலில் உம்மன் சாண்டி என்று பெயர் சொல்லி கூப்பிட்டார். சின்னஞ்சிறு சிறுமி தன்னைப் பெயர் சொல்லி அழைப்பதைக் கேட்ட முதல்வர், அந்தச் சிறுமியை தனது அருகில் அழைத்துப் பேசியபோது, தன்னுடன் படிக்கும் அமல் கிருஷ்ணாவின் தந்தையும், தாயும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வீடு இல்லை, அந்த குடும்பத்துக்கு உதவ வேண்டும் என்று கோரினார். இதைக் கேட்டு மனம் இரங்கிய உம்மன் சாண்டி அவர்கள், வீடு கட்டுவதற்காக அமல் கிருஷ்ணாவின் குடும்பத்துக்கு மூன்று இலட்சம் ரூபாய் நிதியுதவியை வழங்கினார்.

ஏழு வயதிலே பிறர் துன்பம் துடைக்க துணிச்சலுடன் செயல்பட்ட வீரமங்கை ஷிவானிக்கு, உலக மகளிர் தினத்தில் எம் சிறப்பு வாழ்த்துக்கள். அன்பர்களே, மிக அதிக ஊதியம் என்ற காரணத்தால், கடந்த 25 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சுற்றி ஈயாய் மொய்த்த பெண்கள், இன்று அங்குப் பணிச்சுமை மற்றும் அதனால் ஏற்படும் மன அழுத்தத்துக்கு ஆட்பட்டுத் திணறிக்கொண்டிருக்கின்றனர். நிரந்தரமற்ற வேலை, எட்டு மணி நேரம் கடந்து, ஏறத்தாழ பத்து மணி நேரங்கள் உழைப்பதற்கு நிர்பந்திக்கப்படுகிறார்கள். அதிலும் மிக இளம் வயதிலேயே வேலை கிடைப்பதால், வேலை அடிமைகளாக இருப்பதற்கும் அவர்கள் சம்மதிக்கிறார்கள். இந்த நிறுவனங்களில் சீனியர்களுக்கோ, சீனியாரிட்டிக்கோ சற்றும் மதிப்பில்லை என்பதும் கசப்பான உண்மை. வளரும் நாடுகளில் இரவு நேரப் பணிகளில் அதிகம் ஈடுபட்டிருப்பவர்களும் இவர்களே. இன்றைக்கு இந்தியாவில் இந்தத் துறை சார்ந்து பணிபுரிபவர்களில் மூன்றில் ஒரு பங்கினராக இருக்கும் பெண்களால் 50 விழுக்காட்டு  அளவுக்கு முன்னேறித் திறம்படச் செயலாற்ற முடியும் என்றாலும், அதிகப் பணி நேரம் மற்றும் மகப்பேறு விடுப்பின்மை இரண்டும் பெரும் எதிரிகளாக இருக்கின்றன. கடந்த ஆண்டு ஒரு நிறுவனம், மகப்பேறு விடுப்பு அளிக்க விரும்பாமல் சம்பந்தப்பட்ட பெண்ணை வேலையை விட்டு விலக்கியதும், அவர் வழக்கு தொடுத்து தன் உரிமையை நிலைநாட்டிக்கொண்டதும் தகவல் தொழில்நுட்பத் துறையின் வரலாற்றில் என்றும் அழிக்க முடியாத சுவடுகள் என்று, தி இந்து நாளிதழில் கூறப்பட்டிருந்தது. இந்தியாவில் 24 விழுக்காட்டுப் பெண்கள் மட்டுமே ஊதியம் பெறும் வேலைகளைச் செய்கிறார்கள். மற்றவர்கள் பாதுகாப்பற்ற, விவசாயப் பணிகளில் தினக்கூலிகளாக, குறைந்த ஊதியத்துக்கு வேலை செய்கிறார்கள். இப்படி இவர்கள் செய்யும் ஊதியமற்ற வேலைகளின் மதிப்பு ஆண்டுக்கு, ஏறக்குறைய 19.85 இலட்சம் கோடி என்று, ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.

அன்பு நெஞ்சங்களே, பெண்கள் உழைக்கும் இயந்திரங்கள் அல்லவே. பெண்ணே, நீ, உனக்கென வாழும் நாள் எப்போது வரும், அப்போதுதான் உன்னில் உண்மையான மாற்றம் நிகழும். பெண்ணே, ஆயிரம் அலுவலிலும் அலுக்காத உள்ளம் கொண்டவர் நீ. கரு சுமந்து, உரு தந்து, உலகம் உன்னில் வாழ, பிள்ளை பசியறிந்து அன்பையே போதிக்கும் தாய் நீ. துணிந்து நில். உனது பெண்மையை நீ போற்று முதலில். இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.