2016-03-07 15:13:00

திருத்தந்தை பிரான்சிஸ் அரிச்சாவில் ஆண்டுத் தியானம்


மார்ச்,07,2016. “இவ்வுலகில் மனித வாழ்வும், ஒவ்வொரு மனிதரின் மாண்பும் மதிக்கப்படுவதற்கு வழிகளை ஊக்குவிக்கும் சரியான தருணமாக,  இரக்கத்தின் யூபிலி ஆண்டு உள்ளது” என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இஞ்ஞாயிறன்று வெளியிடப்பட்டது.

மேலும், திருப்பீடத் தலைமையகத் துறைகளில் பணியாற்றும் தலைவர்களுடன் இஞ்ஞாயிறு மாலையில் ஆண்டு தியானத்தைத் தொடங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தியானத்தைச் செய்யும் எல்லாருக்காகவும் செபிக்குமாறு இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் கேட்டுக்கொண்டார்.

உரோம் நகரின் தென்கிழக்குப் புறநகர்ப் பகுதியிலுள்ள அரிச்சா விண்ணகப் போதகர் தியான இல்லத்தில், மரியின் ஊழியர் சபை அருள்பணி Ermes Ronchi அவர்கள், இத்தியானச் சிந்தனைகளை வழங்குகிறார்.

நீங்கள் என்ன தேடுகிறீர்கள் என்று இயேசு, தம்மைப் பின்தொடர்ந்தவர்களைக் கேட்ட நற்செய்திப் பகுதியிலிருந்து தியானச் சிந்தனைகளைத் தொடங்கிய அருள்பணி Ronchi அவர்கள், இறைவனே மகிழ்வு, ஆனால், திருஅவைகளில், நாம் இந்த மகிழ்வை, சோர்வுணர்வுகளால் மரணிக்கச் செய்கிறோம் என்று கூறினார்.

மகிழ்வு, சுதந்திரம், முழுமை ஆகியவை இறைவனின் பெயர்கள் என்றும், கிறிஸ்துவின் அழகைக் கண்டுணர்வதிலிருந்து, இறைவன் மீது தாகம் நமக்குப் பிறக்கின்றது என்றும் கூறினார் அருள்பணி Ronchi. இத்தியானம் வருகிற வெள்ளியன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.