2016-03-05 15:35:00

திருத்தந்தை - பாவம் நம் பார்வையைப் பறிக்கின்றது


மார்ச்,05,2016. இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டில், சிறிதளவு துணிச்சல் கொண்டு, ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறுவதற்குச் செல்லுமாறும், தன்னலம் மற்றும் பாவத்தை விலக்கி இறைவனிடம் திரும்பிச் செல்லுமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

“ஆண்டவரோடு 24 மணி நேரங்கள்” என்ற, பாவமன்னிப்பு வழிபாட்டை இவ்வெள்ளி மாலையில், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் தலைமையேற்று நடத்தி ஆற்றிய மறையுரையில் இவ்வாறு விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இம்மறையுரைக்குப் பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்பசிலிக்காவில் ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறுவதற்கு முதலில் சென்றார். அதற்குப் பின்னர்,  திருத்தந்தையும், அறுபது அருள்பணியாளர்களும் ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றினர். சிலர் அப்பசிலிக்காவின் மூலைகளில் சாதாரண பிளாஸ்டிக் நாற்காலிகளில் அமர்ந்து இந்த அருளடையாளத்தை நிறைவேற்றினர்.

மீண்டும் பார்வை பெற விரும்பிய பார்வையற்றிருந்த பர்த்தமேயு போன்று, கத்தோலிக்கரும், மீண்டும் பார்வை பெற விரும்புவதால், ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறுவதற்குச் செல்லுமாறு மறையுரையில் கூறினார் திருத்தந்தை.

நன்மையான எல்லாவற்றையும் பார்ப்பதற்குரிய பார்வைத் திறனை நம் பாவங்கள் மறைக்கின்றன, நம் அழைப்பின் அழகையும் நம்மிடமிருந்து அவை திருடுகின்றன என்றும் உரைத்த திருத்தந்தை, பாவத்தின் குருட்டுத்தன்மை, நம்மைத் தனிமைப்படுத்துகின்றது மற்றும் சிறுமைப்படுத்துகின்றது என்றும் கூறினார்.

பாவம் நம் பார்வையைப் பறிக்கின்றது, ஒப்புரவு அருளடையாளம் அதைக் குணமாக்குகின்றது என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் இருப்பையும், அவரின் அன்பையும் அனுபவிப்பதற்கும், அவரிடம் நம் முழு இதயத்தோடு திரும்பி வருவதற்கும் இரக்கத்தின் யூபிலி ஆண்டு ஏற்ற காலம் என்றும் கூறினார்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.