2016-03-05 15:45:00

திருத்தந்தை, கிறிஸ்தவ ஒன்றிப்புக்காகக் கடுமையாய் உழைக்கிறார்


மார்ச்,05,2016. சுவிட்சர்லாந்து பிரிந்த கிறிஸ்தவ சபைகள் கூட்டமைப்பின் தலைவர்  Gottfried Locher அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பு குறித்து வத்திக்கான் வானொலியின் ஜெர்மன் மொழிப் பிரிவுக்குப் பேட்டியளித்த Locher அவர்கள், ஐரோப்பாவில், கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் பிரிந்த கிறிஸ்தவ சபைகளின் நிலைமை குறித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

திருத்தந்தையுடன் இடம்பெற்ற சந்திப்பு மிகவும் இனிதாக இருந்தது என்றும், திருத்தந்தை மிகவும் புன்சிரிப்போடு கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார் என்றும் கூறிய Locher அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பில் மிகவும் ஆர்வமாய் உள்ளார் என்றும் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்புக்காகக் கடுமையாய் உழைத்து வருகிறார் என்று தான் உணர்வதாகவும், இப்பணியை, அவர் தனது மேய்ப்புப்பணி அக்கறையாகக் கருதுவதாகவும் கூறிய Locher அவர்கள், இச்சந்திப்பின் இறுதியில், நாம் கிறிஸ்துவில் சகோதரர்கள் என்று கூறி, தனக்காகச் செபிக்குமாறு திருத்தந்தை கேட்டது உள்ளத்தை மிகவும் தொட்டது என்றும் பகிர்ந்து கொண்டார் Gottfried Locher.   

மேலும், உக்ரேய்ன் கிரேக்க கத்தோலிக்கத் திருஅவைப் பேரவையின் நிரந்தரக் குழுவினரையும் இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.