2016-03-05 15:16:00

கொல்லப்பட்ட 4 அ.சகோதரிகள் கிறிஸ்துவின் அன்புக்குச் சாட்சிகள்


மார்ச்,05,2016. ஏமன் நாட்டின் ஏடன் நகரில், அன்னை தெரேசா சபையின் நான்கு அருள்சகோதரிகள் கொடூரமாயக் கொல்லப்பட்டுள்ளது, இந்திய மற்றும் ஆசியத் திருஅவைகளை, ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது என்று, மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள் கூறியுள்ளார்.

இதில் இறந்துள்ள நான்கு அருள்சகோதரிகளும், ஏமனில் கடும் சண்டை இடம்பெற்று வந்தாலும், அந்நாட்டைவிட்டுச் செல்வதற்கு மறுத்து, அங்கேயே தொடர்ந்து பணியாற்ற, தங்களை அர்ப்பணித்த, துணிச்சலும், தன்னலமுமற்ற மறைப்பணியாளர்கள் என்று பாராட்டியுள்ளார் கர்தினால் கிரேசியஸ்.

இத்தாக்குதலில் இறந்துள்ள நான்கு அருள்சகோதரிகளுள் ஒருவரான அருள்சகோதரி ஆன்செல்ம் அவர்கள், இந்தியக் குடிமகள் என்றும், இவர், ஏடனில் இயேசுவுக்குப் பணியாற்றுவதற்காக எல்லாவற்றையும் தியாகம் புரிந்தவர் என்றும் கூறியுள்ளார் கர்தினால் கிரேசியஸ்.

மேலும், தொழுநோயாளர் மற்றும் வயதானவர்களுக்குப் பணியாற்றுவதற்காக, ஏமன் அரசு, அருளாளர் அன்னை தெரேசா அவர்களுக்கு விடுத்த அழைப்பை ஏற்று அச்சபையினர் ஏமன் சென்றனர். அப்போது அந்த அழைப்பை ஏற்ற அன்னை தெரேசா அவர்கள், தன் சபை சகோதரிகளின் ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அருள்பணியாளர்கள் ஏமனில் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று, அரசைக் கேட்டுக்கொண்டார். அதன்படி ஐந்து சலேசிய சபையினர் அங்கு பணியாற்றுகின்றனர்.

கேரளாவைச் சேர்ந்த சலேசிய அருள்பணியாளர் Tom Uzhunnalil அவர்கள் ஏமனில் மறைப்பணியாற்றிய ஆலயம் சூறையாடப்பட்டதையடுத்து, அவர் அன்னை தெரேசா சபையின் முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தார். தற்போது அவர் பற்றிய விபரங்கள் எதுவும் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.

சலேசிய அருள்பணியாளர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப இச்சனிக்கிழமையன்று சிறப்புச் செபங்கள் அர்ப்பணிக்கப்பட்டன.    

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.