2016-03-05 15:57:00

கர்தினால் போ - மியான்மாரில் மாற்றத்திற்கான நேரம் இதுவே


மார்ச்,05,2016. மியான்மார் நாடு, அரசியல், கல்வி மற்றும் சமுதாய மாற்றத்திற்குத் தாகம் கொண்டுள்ளது, இதுவே மாற்றத்திற்கான நேரம், இப்போது நாடு மாறவில்லையென்றால், மாற்றம் மீண்டும் நடக்காது, இராணுவ ஆட்சியால் சோர்வடைந்துள்ளோம் என்று அந்நாட்டுத் திருஅவைத் தலைவர் கூறினார்.

மியான்மாரின் தற்போதைய நிலைமை குறித்து, ஆசியச் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த, யாங்கூன் பேராயர் கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள்,   மியான்மாரின் கரங்களில் தற்போது மாற்றத்திற்கான வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

கடந்த நவம்பரில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஆங் சான் சூச்சி அவர்களின் தேசிய சனநாயக கட்சி அமோக வெற்றி பெற்றது, சனநாயகம் மற்றும் சமய சுதந்திரத்திற்கான புதிய கூறுகளுக்கு வழி அமைத்துள்ளது என்றும் கூறினார் கர்தினால் போ.

வருகிற ஏப்ரல் முதல் தேதி ஆரம்பிக்கவுள்ள புதிய நாடாளுமன்றம், மியான்மார், வத்திக்கானுடன் மீண்டும் அரசியல் உறவை உருவாக்குவது குறித்து தீர்மானிக்கலாம் என்றுரைத்த கர்தினால் போ அவர்கள், வத்திக்கானுக்கும், மியான்மாருக்கும் இடையே அரசியல் உறவுகள் விரைவில் ஏற்படுத்தப்படலாம் என்றும் கூறினார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.