2016-03-04 16:20:00

புனிதர் மற்றும் அருளாளர் நிலைகளுக்கு உயர்த்துவதற்கென 12 பேர்


மார்ச்,04,2016. சலேசிய சபையின் முன்னாள் ஷில்லாங் ஆயர் இறையடியார் Stefano Ferrando உட்பட, புனிதர் மற்றும் அருளாளர் நிலைகளுக்கு உயர்த்துவதற்கென, நான்கு பேரின் பரிந்துரைகளால் இடம்பெற்ற புதுமைகள் மற்றும் ஏழு இறையடியார்களின் வீரத்துவமான வாழ்வு குறித்த விபரங்களை ஏற்றுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீட புனிதர் நிலை பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ அவர்கள், இவ்வியாழன் மாலை வத்திக்கானில் திருத்தந்தையைச் சந்தித்து, இந்த 12 பேர் குறித்த விபரங்களைச் சமர்ப்பித்தார்.

நாசரேத் திருநற்கருணை மறைபோதக சபை சகோதரிகள் சபையை ஆரம்பித்த, பலேன்சியா ஆயர், அருளாளர் Emanuele González García, காலணி அணியாத கார்மேல் சபையின் அருளாளர் Elisabetta della Trinità, இதே சபையைச் சேர்ந்தவரும், வாழ்வின் நம் அன்னை மூன்றாம் சபையைத் தொடங்கியவருமான இறையடியார் Maria-Eugenio di Gesù Bambino, ஆர்ஜென்டினா நாட்டின் இறையடியார் Maria Antonia di San Giuseppe ஆகியோரின் பரிந்துரைகளால் புதுமைகள் நடந்துள்ளன.

மேலும், ஆயர் Stefano Ferrando, இயேசுவின் திருஇதய மறைப்பணியாளர் சபையின் ஆயர் Enrico Battista Stanislao Verjus, திருச்சிலுவை புதல்வியர் சபையை ஆரம்பித்த அருள்பணி Giovanni Battista Quilici, பங்குக் குருவான Bernardo Mattio, பிரான்சிஸ்கன் சபையின் Quirico Pignalberi, வியாகுல அன்னை பிறரன்பு சகோதரிகள் சபையை நிறுவிய Teodora Campostrini, சியன்னா மெர்சி ஆஞ்சலா சபையைத் தோற்றுவித்த Bianca Piccolomini Clementini, பக்த பள்ளிகள் சபையின் Maria Nieves Sánchez y Fernández ஆகிய எட்டு இறையடியார்களின் வீரத்துவமான வாழ்வு குறித்த விபரங்களை ஏற்றுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சலேசிய சபையின் முன்னாள் ஷில்லாங் ஆயர் Stefano Ferrando அவர்கள், கிறிஸ்தவர்களின் சகாய அன்னை மறைபோதக சகோதரிகள் சபையைத் தொடங்கியவர். 1895ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி பிறந்த இவர், 1978ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி இறந்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.