மார்ச்,04,2016. நிலக்கண்ணி வெடிகளை உலகளவில் தடை செய்யும் ஒட்டாவா ஒப்பந்தத்தில் இலங்கையும் இணைவதற்கு, அந்நாட்டு அமைச்சரவை இசைவு தெரிவித்திருப்பதாக, இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஹர்ஷ டி சில்வா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இத்தீர்மானத்தின் அடிப்படையில், நிலக்கண்ணி வெடி பொருட்களை பயன்படுத்துவதிலிருந்து இலங்கை விலகிக்கொள்ளப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.
ஒட்டாவா ஒப்பந்தத்தில் 180 நாடுகள் கையெழுத்திட்டிருந்த நிலையில், கையெழுத்திடாத ஏறக்குறைய முப்பது நாடுகளில் ஒன்றாக இலங்கை இருக்கிறது என்று கூறிய அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, இலங்கையில் மீண்டும் போர் நடக்காது என்பதை உலகிற்கு உணர்த்துவதற்காக நிலக்கண்ணி வெடியைத் தடை செய்யும் ஒட்டாவா ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறினார்.
ஒட்டாவா ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம், நிலக்கண்ணி வெடிகளைத் தயாரிப்பது, அதனைப் பயன்படுத்துவது, அதனைச் சேமித்து வைப்பது போன்றவற்றிலிருந்து இலங்கை அரசு விலகிக்கொள்ளவுள்ளது எனவும் அமைச்சர் டி சில்வா அவர்கள் தெரிவித்தார்.
ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |