2016-03-04 16:08:00

இறை இரக்கத்தில் மூழ்கியிருக்க “ஆண்டவரோடு 24 மணி நேரங்கள்”


மார்ச்,04,2016. அன்றாட ஆன்மீக வாழ்வில், பாவத்திற்கு மனம் வருந்துவதையும், ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறுவதையும் இந்த யூபிலி ஆண்டில் மையமாக வைப்பதற்கு மேலும் ஒரு வாய்ப்பாக, “ஆண்டவரோடு 24 மணி நேரங்கள்” பக்தி முயற்சி அமைந்துள்ளது என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.

செபம், திருநற்கருணை ஆராதனை மற்றும் ஒப்புரவு அருளடையாளத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கத்தில் மூன்றாவது ஆண்டாக இவ்வெள்ளியன்று தொடங்கும் “ஆண்டவரோடு 24 மணி நேரங்கள்” என்ற பக்தி முயற்சி, விசுவாசிகள், இறை இரக்கத்தில் ஆழமாக மூழ்கியிருக்க உதவும் என்று, அருள்பணி யூஜின் சில்வா அவர்கள் கூறினார்

நற்செய்தியை புதிய வழியில் அறிவிக்கும் திருப்பீட அவை ஏற்பாடு செய்துள்ள இப்பக்தி முயற்சி பற்றி வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த, அந்த அவையின் அருள்பணி யூஜின் சில்வா அவர்கள், உரோமையில் மட்டுமல்ல, உலகின் அனைத்து மறைமாவட்டங்களிலும் “ஆண்டவரோடு 24 மணி நேரங்கள்” பக்தி முயற்சி நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

 

இவ்வெள்ளி மாலை 5 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்துகிறார்.

உரோம் நகரின் மரியின் திருஇதய ஆலயம் (Piazza Navona),  Trastevere புனித மரியா ஆலயம்(Piazza di Santa Maria in Trastevere), ஐந்து காய புனித பிரான்சிஸ் ஆலயம் (Largo Argentina) ஆகிய மூன்று ஆலயங்களிலும் இவ்வெள்ளி இரவு 9 மணிக்கு, ஒப்புரவு அருளடையாளமும், திருநற்கருணை ஆராதனையும் நடைபெறும்.

மார்ச், 05 இச்சனிக்கிழமையன்று, மரியின் திருஇதய ஆலயத்தில், மாலை 4 மணி வரை  அருள்பணியாளர்கள் ஒப்புரவு அருளடையாளத்தைக் கேட்பார்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.