2016-03-03 15:48:00

பெங்களூருவில் இந்திய ஆயர் பேரவைக் கூட்டம் ஆரம்பம்


மார்ச்,03,2016. இந்தியாவில் நாம் சந்திக்கும் சவால்கள், முதலில் திருஅவைக்குள்ளிருந்து வருகிறது என்றும், அடுத்தது, மத சார்பற்ற நாட்டிலிருந்து வருகிறது என்றும், இந்திய ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள் கூறினார்.

மார்ச் 2, இப்புதனன்று, இந்திய ஆயர் பேரவையின் நிறையமர்வுக் கூட்டம், தென்னிந்தியாவின் பெங்களூரு நகரில் துவங்கிய வேளையில், கர்தினால் கிளீமிஸ் அவர்கள், தன் துவக்க உரையில் இவ்வாறு கூறினார்.

அடிப்படைவாதக் கொள்கைகள், பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவைச் சிதைத்து வருவதை, நாம் ஒன்று சேர்ந்து எதிர்க்கவேண்டும் என்று கர்தினால் கிளீமிஸ் அவர்கள் தன் உரையில் அழைப்பு விடுத்தார். 

அர்ப்பணிக்கப்பட்ட துறவிகள் சந்திக்கும் சவால்கள், திருஅவைப் பணிகளில், பொது நிலையினர் மற்றும் குடும்பங்களின் பங்கு, வறியோரின் திருஅவையாக மாறும் வழிகள் ஆகியவை இந்த ஆண்டுக்கூட்டத்தில் பேசப்படும் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

180க்கும் அதிகமான ஆயர்கள் பங்கேற்கும் இந்த ஆண்டுக்கூட்டத்தில், இந்து, மற்றும் இஸ்லாமிய அறிஞர்களும் பேச விருக்கின்றனர் என்றும், அவர்களது உரையிலிருந்து கத்தோலிக்கத் திருஅவை மேற்கொள்ளக்கூடிய சவால்கள் அடையாளப்படுத்தப்படும் என்றும் கர்தினால் கிளீமிஸ் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.