2016-03-03 15:21:00

திருத்தந்தை: மனித வாழ்வின் மையம், நன்மை செய்வதற்கே


மார்ச்,03,2016. நன்னெறியின் வழி வாழ்வதற்கும், நன்மைகள் செய்வதற்கும், அறிவியலும், தொழில் நுட்பமும் உதவாது; மாறாக, நன்மைகள் நிறைந்த உள்ளத்தாலும், சிந்தனையாலும் இவை சாத்தியமாகும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

வாழ்வை வலியுறுத்தும் அறிவியலை வளர்க்க உருவான பாப்பிறை கல்விக் கழகத்தின் உறுப்பினர்களை, மார்ச் 3, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனிதர்கள் ஆற்றும் நன்மைகள், கணிதம், மற்றும் அறிவியல் ஆகியவற்றால் உருவாவது இல்லை என்று கூறினார்.

'நன்னெறி வாழ்வின் புண்ணியங்கள்' (Virtues in the Ethics of Life) என்ற தலைப்பில் பாப்பிறை கல்விக் கழகம், மார்ச் 4, இவ்வெள்ளியன்று உரோம் நகரில் ஏற்பாடு செய்துள்ள ஒரு பயிற்சிப் பாசறையில் கலந்துகொள்ள வந்திருக்கும் உறுப்பினர்களைச் சந்தித்தத் திருத்தந்தை, அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் முயற்சிகளுக்கு தன் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

"தீயன மனித உள்ளத்திலிருந்து வெளிவருகின்றன" (மாற்கு 7: 21) என்று மாற்கு நற்செய்தியில் கூறப்பட்டுள்ள வார்த்தைகளைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, நல்ல, மற்றும், தீய எண்ணங்கள் வெளியிலிருந்து வருவதில்லை, மாறாக, அவை உள்ளத்திலிருந்தே வருகின்றன என்று எடுத்துரைத்தார்.

நன்மை, தீமை இவற்றைப் பகுத்தறியும் திறன், இறைவன் அளித்துள்ள ஒரு கொடை என்பதை இன்றைய உலகம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது என்றும், மனித வாழ்வை வெறும் உலக ரீதியில் சிந்திக்கும்படி நாம் தொடர்ந்து தூண்டப்படுகிறோம் என்றும் தன் உரையில் தெளிவுபடுத்தினார் திருத்தந்தை.

மனித நலத்தை மையப்படுத்திய பல சமுதாய அமைப்புக்கள் இவ்வுலகில் உள்ளன எனினும், சுயநலம், இலாபம் என்ற அம்சங்களை மையப்படுத்தும் பல நூறு அமைப்புக்கள், மனித வாழ்வின் மையம் நன்மை செய்வதற்கே என்ற குறிக்கோளை கேள்விக் குறியாக்குகின்றன என்ற கருத்தை தன் உரையில் வலியுறுத்தினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.