2016-03-02 14:55:00

இறை அன்பு மற்றும் மன்னிப்பு எனும் புதுமையை அனுபவிப்போம்


மார்ச்,02,2016. குளிர் முடியும் காலம், கோடையை எதிர்நோக்கியிருக்கும் காலம் என்பதுபோல், இலேசான குளிர் காற்றுடன், காலநிலையானது, சூரிய வெப்பக் கதிர்களை இதமாக பரப்பிக்கொண்டிருக்க, உரோம் நகரின் தூய பேதுரு பேராலய வளாகத்தில் குழுமியிருந்த பல ஆயிரக்கணக்கான மக்களிடம், இரக்கத்தின் யூபிலி ஆண்டு குறித்த தன் மறைக்கல்வி உரையை தொடர்ந்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தெய்வீக இரக்கத்தின் இந்த புனித‌ ஆண்டால் தூண்டப்பட்டுள்ள, இந்த மறைக்கல்விப் போதனைகளில், இறைவனின்  தந்தைக்குரிய அன்பு மற்றும் மன்னிப்பு குறித்து நாம் பலமுறை ஆழ்ந்து சிந்தித்துள்ளோம். தவறுகளைத் திருத்திக்கொள்வது உட்பட, மனமாற்றத்திற்கும், இறைவனுடன் நாம் கொள்ளும் உடன்படிக்கையின் புதுப்பித்தலுக்கும் உறுதுணையான ஓர் அழைப்பாகத்தான் இறை அன்பை முன் வைக்கின்றனர் இறைவாக்கினர்கள்.

சுதந்திரத்திலும் பொறுப்புணர்விலும்  வளர்வதற்கு உதவுவதில் இருக்கும் சவால் குறித்து ஒவ்வொரு பெற்றோருக்கும் தெரியும்.  தன் குழந்தைகளின் பாவம் மற்றும் கீழ்ப்படியாமையினால், தன் அன்பு புறக்கணிக்கப்படுவதைக் குறித்து, இறைவன், தன் வருத்தத்தை வெளியிடுவதை நாம் விவிலியத்தில் காண்கிறோம். தன் குழந்தைகள், மனவருந்தலையும், மனமாற்றத்தையும் நோக்கித் திரும்பவேண்டும் என்பதற்காகவே, இறைவன் அவர்களைக் கடுமையாகக் கடிந்துகொள்கிறார். தவறிழைத்தவர்கள் அவரை நோக்கித் திரும்பி வரவேண்டும் என இறை இரக்கத்தில் அழைப்புவிடுக்கும் இறைவன், தன் கொடையான நீதியை அவர்கள் பெறவேண்டும் என விரும்புகிறார். பலிகளால் அல்ல, மாறாக, தீயவற்றை விலக்கி, நீதியை நடைமுறைப்படுத்தும் மனிதர்களின் செயல்கள் குறித்தே இறைவன் மகிழ்ச்சியடைகிறார் என, இறைவாக்கினர் எசாயா உரைக்கிறார். நம் பாவங்கள் கருஞ்சிவப்பு வண்ணமுடையதாக இருந்தாலும், அவற்றை வெண்பனி போல் மற்றுவார் இறைவன். இந்தப் புனித ஆண்டில், நாமனைவரும், இறைவன் விடுக்கும் அழைப்பிற்கு நம்மைத் திறந்தவர்களாக செயல்படுவோம். இறை அன்பு மற்றும் மன்னிப்பு எனும் புதுமையை அனுபவித்து, நாம் இறைவனிடம் திரும்பிச் செல்லவேண்டும் என, வானகத்தந்தையாம் இறைவன் நமக்கு கருணையுடன் கூடிய அழைப்பை முன்வைக்கிறார்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.