2016-03-02 16:00:00

'ஆஸ்கர்' விருது பெற்ற பாகிஸ்தான் பெண்மணி ஷர்மீன்


மார்ச்,02,2016. இவ்வாண்டு நடைபெற்ற 'ஆஸ்கர்' திரைப்பட விருது விழாவில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஷர்மீன் ஒபாய்த்-சினோய் (Sharmeen Obaid-Chinoy) என்ற பெண்மணி, குறுகிய ஆவணப்படத்திற்கான விருதைப் பெற்றார்.

பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் கொடுமைகளில் ஒன்றான, தன்மானக் கொலைகள் (honour killing) என்ற கருத்தை மையப்படுத்தி, ஷர்மீன் அவர்கள் உருவாக்கிய ‘A Girl in the River: The Price of Forgiveness’ அதாவது, 'ஆற்றில் ஒரு பெண்: மன்னிப்பின் விலை' என்ற ஆவணப் படம் இவ்விருதைப் பெற்றுள்ளது.

19 வயது நிறைந்த சபா கைசெர் (Saba Qaiser) என்ற இளம்பெண், தான் காதலித்த ஒருவரை மணந்துகொண்டார் என்ற காரணத்திற்காக, அவரது தந்தையும், மாமாவும் அப்பெண்ணை, துப்பாக்கியால் தலையில் சுட்டு, பிளாஸ்டிக் துணியில் சுற்றி, ஆற்றில் எறிந்துவிட, அப்பெண் அந்தக் கொடுமையிலிருந்து அற்புதவிதமாகத் தப்பித்து, இக்கொடுமையை வெளிச்சத்திற்குக் கொணர்ந்ததை மையப்படுத்தி, இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தை தன் அமைச்சரவை உறுப்பினர்களுடன் பார்த்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப் (Nawaz Sharif) அவர்கள், தன்மானக் கொலைகளைத் தடுக்கும் சட்டம் கண்டிப்பாகக் கொண்டுவரப்பட வேண்டும் என்று தன்னிடம் கூறியதாக, இத்திரைப்படத்தை உருவாக்கிய ஷர்மீன் அவர்கள் 'ஆஸ்கர்' விருது விழாவில் கூறினார்.

பாகிஸ்தானில் தன்மானக் கொலைகள் தடைசெய்யப்படும் சட்டம் அமலுக்கு வந்தால், தான் அடைந்துள்ள 'ஆஸ்கர்' விருதைக் காட்டிலும் பெரிதும் மகிழ்வேன் என்றும் ஷர்மீன் அவர்கள் இவ்விழாவில் கூறினார்.

ஒவ்வோர் ஆண்டும் பாகிஸ்தானில் 4000 பேர் தன்மானக் கொலைகளுக்கு உள்ளாகின்றனர் என்றும், இவர்களில் 1000பேரின் கொலைகளே வெளிச்சத்திற்கு வருகின்றன என்றும் ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.